background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிற்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த போது, சுவான் டெலிகாம் நிறுவனத்திற்கு ராஜா சலுகை காட்டியதாகவும், அதற்கு பிரதிபலனாக கலைஞர் "டிவி'க்கு குறிப்பிட்ட தொகையை சுவான் நிறுவனத்தின் தலைவர் பல்வா வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜ்யசபா எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. அவரிடம் வரும் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

இது தொடர்பாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாதது. அவரிடம் மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக கனிமொழிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். சுவான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கலைஞர் "டிவி'யில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளது. குறிப்பாக கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது' என்றார். இருந்தாலும், அதே கலைஞர் "டிவி'யின் மற்றொரு பங்குதாரராக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர் அதில், "சிலீப்பிங் பார்ட்னர்' என்ற வகையில் அவரை விசாரிக்க வாய்ப்பில்லை என்று சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் விசாரிப்பதற்கு முன்னதாக கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 8ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், பல்வாவிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிப்பதால், விசாரணைத் தகவல்கள், அது குறித்த டைரிக் குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் - தி.மு.க., இடையே நடந்த "சீட்' ஒதுக்கீடு பிரச்னையின் போது, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா முதலில் காங்கிரசை வியப்படைய வைத்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நடத்தப்படும் விசாரணை சற்று மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற கருத்தை தி.மு.க., தரப்பில் முன்வைத்ததாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கோபமடைந்து முதலில் இவர்களுடைய குழுவுடன் பேச முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்கும் நிலை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜே.பி.சி., விசாரணைக்கு அனுமதி, மறுபக்கம் பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆகியவை தீவிரமாக இருப்பதால், சி.பி.ஐ., மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தலையிட முடியாத நிலை அரசுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24ம் தேதி ஆலோசனை: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை, குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். இந்த கூட்டத்தில் குழுவினர் செய்ய வேண்டியது என்ன, யார் யாரிடம் விசாரணை நடத்துவது, என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 30 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts