background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

சென்னை : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள்.மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.

கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில், இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒற்றுமையாக இருந்து, அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து, உற்சாகமூட்டுகிற முறையில் பொறுப்புடன் விளையாடி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு தருகிற வாழ்த்து.இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts