background img

புதிய வரவு

வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் * கேப்டன் தோனி அறிவுரை

மொகாலி: "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து வெளியாகும் பல்வேறு செய்திகளால், வீரர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. இன்றைய போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் உலகின் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி குறித்து, பல்வேறு செய்திகளை மீடியா வெளியிட்டு வருகிறது. இதிலிருந்து எங்கள் மீது எந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. இவைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒருபகுதி தான். இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
உலக கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதற்காக சிறப்பாக தயாராகியுள்ளோம். இருப்பினும், இதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடியதைப் போல, இப்போதும் அதுபோலத்தான் விளையாட போகிறோம். மற்றபடி சொந்தமண் என்பதால் ஏற்படும் நெருக்கடி, எங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
சிறப்பான பவுலிங்:
அதேநேரம், பாகிஸ்தான் அணி சிறந்த பவுலிங்கை கொண்டுள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். தவிர, "பார்ட் டைம்' பவுலர்களும் அசத்துகின்றனர். இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அப்ரிதியின் பந்துகளை கவனித்து, விளையாடுவோம்.
பேட்டிங் நம்பிக்கை:
பொதுவாக 5,6 அல்லது 7வதாக களமிறங்கும் போது, அதிகமாக பேட்டிங்கிற்கு வாய்ப்பு வராது. என்னைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடுகிறேன். ஒருசில நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நல்ல சூழ்நிலை இருந்த போது, நான் பேட்டிங் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிரடிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பந்து நேராக பீல்டரிடம் சென்றுவிட்டது.
முக்கியமான போட்டி:
இந்த போட்டி முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம், வரும் காலங்களில் இதை மறந்து விடுவோம். கடந்த 2007 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதி, பைனலின் போது என்ன மனநிலையில் இருந்தோம் என்பது இப்போது தெரியாது. ஏனெனில் அடுத்த 3 ஆண்டுகளில், பல போட்டிகளில் பங்கேற்று விட்டோம்.
ஆடுகளம் தெரியாது:
அதேநேரம், இன்றைய நாளின் இறுதியில் ஏதாவது ஒரு அணி தோற்கத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டிலும் இப்படித்தான் நடக்கும். இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, 50 ஓவரும் அசத்தினால் வெற்றி பெறலாம்.
மொகாலி ஆடுகளத்தை இன்னும் பார்வையிடவில்லை. இதனால் அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாகத்தான் இருந்து வருகிறது.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அரசியல் மாற்றம்
இன்றைய போட்டியில் இரண்டு நாடுகளின் பிரதமர்களின் பங்கேற்பு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" அணியின் கேப்டனாக எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்வேன். போட்டியை காண பிரதமர்கள் வருவது வீரர்கள் கவனத்தை திசை திருப்பலாம். இருப்பினும், இரு நாடுகள் இடையே அரசியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவர, நாங்கள் எப்படி உதவலாம் என, நினைத்துக்கொண்டுள்ளேன்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts