background img

புதிய வரவு

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts