background img

புதிய வரவு

பைனலுக்கு முன்னேறுமா இலங்கை? * இன்று நியூசி.,யுடன் மோதல்

கொழும்பு: உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இன்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், "சுழலில் அசத்தி இலங்கை அணி பைனலுக்கு முன்னேறுமா அல்லது நியூசிலாந்து அதிர்ச்சி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கொழும்புவில் நடக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில், இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.
பலமான துவக்கம்:
இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் தில்ஷன், தரங்கா பெரும் பலமாக உள்ளனர். இதில் தில்ஷன் 2 சதம் உட்பட 394 ரன்களும், தரங்கா 2 சதம் உட்பட 363 ரன்களும் குவித்து மிரட்டுகின்றனர். கேப்டன் சங்ககரா தன்பங்கிற்கு 363 ரன்கள் (ஒரு சதம்) எடுத்துள்ளார். தவிர, ஜெயவர்தனா (200) கைகொடுக்கிறார். "டாப்-ஆர்டர் பலமாக உள்ள அதேநேரத்தில் அணியின் "மிடில்-ஆர்டர் பலவீனமாக உள்ளது. மாத்யூஸ் (80), சமரவீரா (60), சமர சில்வா (64) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சபாஷ் முரளி:
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு வழக்கம் போல மலிங்கா உதவியால், பலத்துடன் உள்ளது. இத்தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்த மலிங்கா (8 விக்.,), மீண்டும் சாதிக்கலாம். இவருடன் குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், 13 விக்கெட் வீழ்த்திய அனுபவ முரளிதரன், தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு சிக்கல் தருவார். தவிர, அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷனும் விக்கெட் வீழ்த்துவது அணிக்கு சிறப்பு.
டெய்லர் அசத்தல்:
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கப்டில் (223 ரன்கள்), பிரண்டன் மெக்கலம் (243) ஆகியோர் சிறப்பான துவக்கம் தருவதில் தொடர்ந்து திணறுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக சதம் கடந்த ராஸ் டெய்லர் (288) மட்டும், அணிக்கு அவ்வப்போது கைகொடுத்து வருகிறார். இவர்களுடன் ஜெசி ரைடர் (165) ஓரளவுக்கு ஆறுதல் தருகிறார். தவிர, "மிடில்-ஆர்டரில் நாதன் மெக்கலம், வில்லியம்சன், பிராங்க்ளின், ஸ்டைரிஸ் உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும்.
சவுத்தி நம்பிக்கை:
நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சில் நம்பிக்கைக்குரிய வீரராக டிம் சவுத்தி உள்ளார். இதுவரை 15 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், இன்று இலங்கையின் துவக்க வீரர்களுக்கு தொல்லை தருவது உறுதி. தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காலிறுதியில் கலக்கிய "ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரம் இன்றும் சாதிக்க முயற்சிக்கலாம். சுழலில் கேப்டன் வெட்டோரி, நாதன் மெக்கலம், உட்காக் அணிக்கு உதவத் தயாராக உள்ளனர்.
சரியான திட்டமிடல்:
இலங்கை, நியூசிலாந்து இரண்டு அணிகளுமே, காலிறுதியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கித் தான் வெற்றி பெற்றன. இன்றைய அரையிறுதியிலும் இதே கணக்கில் தான் அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் கை ஓங்குகிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது உறுதி.
சொந்த மண்ணில் களமிறங்குவது இலங்கை அணிக்கு சாதகமான விஷயம். அதேநேரம், லீக் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பழிதீர்க்க, நியூசிலாந்து அணி காத்திருப்பதால், பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
---
முரளிதரன் சந்தேகம்
தொடையின் பின்பகுதி மற்றும் முழங்கால் காயம் காரணமாக, இலங்கை அணியின் "சுழல் மன்னன் முத்தையா முரளிதரன், இன்றைய அரையிறுதியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் அரையிறுதியில் முரளிதரன் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இவர், 50 சதவீதம் குணமடைந்தால் கூட இன்றைய போட்டியில் நிச்சயம் பங்கேற்பார். இன்றைய போட்டி மிகவும் முக்கியமானது என்பதால், முரளிதரனுக்கு ஓய்வு வழங்குவதில் எவ்வித பலனும் இல்லை. இவரது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஒருவேளை இவர் விளையாடாத பட்சத்தில், குலசேகராவுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு சங்ககரா கூறினார்.
ஒன்பதாவது முறை
உலக கோப்பை அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் இலங்கை 5, நியூசிலாந்து 3 வெற்றியை பதிவு செய்தன. கடைசியாக கடந்த 18ம் தேதி நடந்த லீக் போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது.
* கடந்த 2007ல், 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்த இலங்கை அணி, உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 225 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1979ல், 189 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி, <உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 18ம் தேதி மும்பையில் நடந்த லீக் போட்டியில், 153 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
* உலக கோப்பை அரங்கில், நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர்கள் வரிசையில் சங்ககரா (4 போட்டி, 211 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். நியூசிலாந்து சார்பில் இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஸ்டைரிஸ் (4 போட்டி, 295 ரன்கள்) முன்னிலையில் உள்ளார்.
* உலக கோப்பை வரலாற்றில், நியூசிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இலங்கை பவுலர்கள் வரிசையில் முரளிதரன் (4 போட்டி, 13 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். நியூசிலாந்து சார்பில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹாட்லீ (3 போட்டி, 7 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* சர்வதேச ஒருநாள் அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் 73 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 35, இலங்கை 33 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி "டை ஆனது.
---
பதிலடி வாய்ப்பு
உலக கோப்பை அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் இரண்டாவது முறையாக (2007, 2011) அரையிறுதியில் மோதுகின்றன. கடந்த 2007ல் நடந்த அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 208 ரன்களுக்கு சுருண்டது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இலங்கை
லீக் சுற்று:
1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி
2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது
5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது
காலிறுதி:
7. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்து
லீக் சுற்று:
1. கென்யாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி.
3. 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயுடன் வெற்றி.
4. பாகிஸ்தானை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
5. 97 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி.
6. இலங்கையிடம் 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
காலிறுதி:
7. தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts