background img

புதிய வரவு

விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக, திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார். 20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். வரும் சட்டசபைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வர். அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.

நடிகர் விஜய் நேரடியாக பிரசாரம் செய்வது பற்றி, இப்போது கூற முடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை.

மக்கள் இயக்கத்தின் சார்பில், நான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து, நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம்.

இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக, திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, காலை 11.10 மணிக்கு வந்த இயக்குனர் சந்திரசேகர் ஓட்டலின் அறையில் உட்கார வைக்கப்பட்டார். பின்னர் மதியம் ஒரு மணிக்கே அவரை ஜெயலலிதா சந்தித்து பேசினார். 20 நிமிடம் சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருப்புக்கு பின்னே ஜெ.,வை சந்திக்க ஆதரவு கொடுக்க வந்த இயக்குனர் சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts