background img

புதிய வரவு

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது : இறுதி நாளில் பா.ஜ ., வெளிநடப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பில் புதிய விவரங்கள் சேர்க்கப்படுவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாதது ஏன் என, முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, பிரணாப் முகர்ஜி வாக்குறுதி அளித்தார்.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று காலையில், லோக்சபா துவங்கியதும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் எழுந்தார். அப்போது அவர், "ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அரசிடம் பல்வேறு விஷயங்களை தெரிவித்திருந்தோம்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை மட்டுமே கணக்கெடுத்தால் போதாது. அரசு கேட்டபடி என்னென்ன விவரங்களை கணக்கெடுப்பின் போது சேர்க்க வேண்டுமென்பது குறித்த தகவல்களை அனுப்பி விட்டோம். ஆனால், இன்னமும் நாங்கள் கேட்டிருந்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யவில்லை. இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரும் முடியப்போவதால் ஏற்கனவே அரசு அளித்திருந்த வாக்குறுதியின் நிலை என்ன' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளிக்கையில், "எதிர்க்கட்சிகள் அளித்த கோரிக்கை விவரங்கள் எனக்கு வந்து சேர்ந்து விட்டன. இவை எல்லாமே முறைப்படி உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

உடனே லாலு பிரசாத் மீண்டும் எழுந்து, "அவரிடம் ஒப்படைக்க கூடாது. அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமாக செயல்படுபவர்' என்றார்.

பின்னர் எழுந்த முலாயம்சிங் பேசும் போது, "அமெரிக்க அதிகாரியிடம் உள்துறை அமைச்சர் பேசுவதாக ஒரு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் எல்லாம் வளமையாக வளர்ச்சியடைந்து விட்டன. வடக்கு, கிழக்கு பகுதிகள் தான் வளர்ச்சியடையவில்லை.

இதன் காரணமாகவே இந்தியா முன்னேறாமல் உள்ளது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு பாரபட்சம் காட்டும் வகையில் பேசியதால், அவர் பதவி வகிக்க தகுதியில்லை. எனவே, உள்துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் அவர் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்க வேண்டும்' என்றார்.

இதையடுத்து பதிலளிக்க பிரணாப் முகர்ஜி பேச ஆரம்பித்தவுடன் சமாஜ்வாடி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் கூச்சல் அதிகரித்ததால் அவையை நடத்த முடியவில்லை. இதனால், அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி எழுந்து, "காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயார் செய்த சுங்லு தன் அறிக்கையை சமர்பித்து விட்டார். ஆனால், அவையில் இன்னும் அந்த அறிக்கை வைக்கப்படவில்லை. எனவே, அந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்து உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்' என்றார்.

அதற்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பேசும்போது, "அது நிர்வாக அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. தேவைப்படும் போது அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை அவைக்கு இல்லையா?' என்றார். இதையடுத்து பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சில வழக்கமான அலுவல்களை முடித்து கொண்டு லோக்சபா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் தன் வழக்கமான அலுவல்களை முடித்து கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts