background img

புதிய வரவு

"சிக்சர் மன்னன்' யுவராஜ் எங்கே?

மொகாலி: ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியவர் தான் யுவராஜ். ஆனால், உலக கோப்பை தொடரில் அடக்கி வாசிக்கிறார். இதுவரை 7 போட்டிகளில் 3 சிக்சர் மட்டுமே அடித்துள்ளார். அதிரடியாக அல்லாமல் பொறுப்பாக விளையாடி, அணிக்கு வெற்றி தேடி தருவதிலேயே கண்ணும்கருத்துமாக இருக்கிறார். இதே "பார்முலாவை' தொடர உள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியிலும் இவர், அதிக சிக்சர் அடிக்க வாய்ப்பு இல்லையாம்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ். மின்னல் வேகத்தில் ரன் சேர்க்கும் இவர், சிக்சர் அடிப்பதில் கெட்டிக்காரர். கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில், தொடர்ந்து 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார். இதே போன்றதொரு ஆட்டத்தை தற்போதைய உலக கோப்பை தொடரிலும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

நிதான ஆட்டம்:
இதற்கேற்ப, "ஆல்-ரவுண்டராக' அசத்திய இவர், நான்கு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆனாலும், பேட்டிங் "ஸ்டைலை' தான் மாற்றி விட்டார். மிகவும் நிதானமாக ஆடுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் லீக் போட்டியில் களமிறங்கவில்லை. அடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக "டை' ஆன போட்டியில், ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 58 ரன்கள் எடுத்தார். அயர்லாந்துடனான போட்டியில் 75 பந்துகளில் 50 ரன்கள்(3 பவுண்டரி) எடுத்த இவர், சிக்சர் அடிக்கவே இல்லை. நெதர்லாந்துக்கு எதிராக 51 ரன்கள்(7 பவுண்டரி) எடுத்த போதும், சிக்சர் அடிக்க தவறினார்.

முதல் சிக்சர்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் தான், இத்தொடரில் தனது முதல் சிக்சரை அடித்தார். இதில், 12 ரன்களே எடுத்தார். சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுடனான போட்டியில் 113 ரன்கள் விளாசிய இவர், 2 சிக்சர் மட்டுமே அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த இவர், மீண்டும் சிக்சர் அடிக்க தவறினார். இது வரை 7 போட்டிகளில் 341 ரன்கள் எடுத்துள்ள இவர், ஒட்டுமொத்தமாக 3 சிக்சர் தான் அடித்துள்ளார்.

எதிர்பார்ப்பு:
இந்நிலையில், வரும் 30ம் தேதி, தனது சொந்த ஊரான மொகாலியில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி போட்டியிலாவது இவர், "சிக்சர்' மழை பொழிவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து யுவராஜின் தந்தை யோகராஜ் கூறுகையில்,""தற்போது யுவராஜ் நன்கு முதிர்ச்சி அடைந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவரது ஆட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு போல இமாலய சிக்சர் அடிக்க விரும்புவதில்லை. பொறுப்பாக ஆடி, அணியின் வெற்றியை நிர்ணயிக்கிறார். இதனால், மொகாலியிலும் அதிக சிக்சர்களை எதிர்பார்க்க முடியாது,''என்றார்.

வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை அரையிறுதி போட்டி வரும் 30ம் தேதி பஞ்சாப்பில் உள்ள மொகாலி மைதானத்தில் நடக்க உள்ளது. இம்மைதானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று நான்கு முறை போன் மூலம் மிரட்டியிருக்கிறார். இதையடுத்து பஞ்சாப் போலீசார் உஷாராகினர். மோப்ப நாய் உதவியுடன் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இறுதியில், புரளி என்பது தெரிய வந்தது. போனில் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். தவிர, இரு நாட்டு பிரதமர்களும் இப்போட்டியை காண வருவதால், பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளனர்.

அம்மாவுடன் சந்திப்பு:
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி தங்களது சொந்த ஊரான பஞ்சாப்பில் நடப்பதால், இந்திய வீரர்களான ஹர்பஜன், யுவராஜ் சிங் ஆகியோர் நேற்று தங்களது வீடுகளுக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்தனர். ஜலந்தரில் தனது அம்மாவை சந்தித்து ஆசி பெற்ற ஹர்பஜன், பிற்பகலில் இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts