background img

புதிய வரவு

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி செய்தது என்ன?-ஜெ. கேள்வி

விழுப்புரம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதியும், திமுக அரசும் என்ன செய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். வழக்கமாக எழுதி வைத்து படித்து வரும் அவர், நேற்றும் அதுபோலவே படித்தார். இருப்பினும் நேற்று நிறைய புதிய விஷயங்கள் அவரது பிரசாரப் பேச்சில் இடம் பெற்றிருந்தது.

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இருந்தபடி அவர் வேனில் அமர்ந்து பேசியதாவது:

இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்காக நடைபெறும் சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்களாகிய உங்களின் விடுதலைக்காக நடைபெறும் தேர்தல். அடிமைத்தனத்தில் இருந்து தமிழக மக்களாகிய உங்களை விடுவிப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

5 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தீர்கள். குறிப்பாக விலைவாசி பிரச்சினையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? இல்லை. 15 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 42 ரூபாய்க்கு விற்கிறது, 13 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை இன்று 33 ரூபாய்க்கு விற்கிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்று 90 ரூபாய்க்கு விற்கிறது. 35 ரூபாய்க்கு விற்ற புளி இன்று 110 ரூபாய்க்கு விற்கிறது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு 250 ரூபாய்க்கு விற்கிறது.

மணல் கொள்ளை இன்றும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 2,500 ரூபாய்க்கு விற்ற ஒரு லோடு மணல் இன்று 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது.

தி.மு.க. ஆட்சி வந்ததில் இருந்து மின் உற்பத்தி பெரு வில்லை. மின் வெட்டு தான் பெருகி இருக்கிறது. இதனால் அன்றைக்கு மிகுமின் மாநிலமாக இருந்த தமிழகம் இன்றைக்கு மின்பற்றாக்குறை மாநிலமாக திகழ்கிறது. இதனால் தொழில்கள் முடங்கி, உற்பத்தி குறைந்து விட்டதால் தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.

தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி விட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்கியது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் தமிழகம் தலைகுனிவை சந்தித்து உள்ளது.

தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கை நன்றாக அமைய ஒவ்வொரு வாக்காளர்களும் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து ஜனநாயக உரிமையை காத்திட வேண்டும்.

கழக ஆட்சி அமைந்த உடன் விழுப்புரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்படும். அரைகுறையாக விடப்பட்டு உள்ள பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக்கப்படும். கோலியனூர் ஒன்றியத்தில் சாலைவசதிகள் மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

வளவனூரில் பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். மீனவர்களின் நலன்பாதுகாக்கப்படும். புதிய பஸ் நிலையத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மயிலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகளின் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன். அவற்றுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஒவ்வொரு வாக்காளரும் வீட்டைவிட்டு வெளியே வந்து அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

பொன்முடி கொட்டத்தை அடக்க வேண்டும்

தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாகவும், எழுச்சியாகவும் அமைய நீங்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தின் பிரச்னைகள் போல் இந்தத் தொகுதியின் மிகப்பெரிய பிரச்னை பொன்முடிதான். அவரின் அட்டகாசத்தையும், கொட்டத்தையும் நீங்கள் அடக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கபட நாடகம் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடச் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற முடியவில்லை. பாலாறு குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்க முடியவில்லை.

மீனவர்கள் படுகொலையைத் தடுக்கவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தலித் மக்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள்.

கருணாநிதி குடும்பம் பறித்த சொத்துக்களை மீட்போம்

விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் தொழில், சினிமாத் துறை ஆகியவை அவர்கள் கையில் சிக்கியுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடமே திருப்பி வழங்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் சிறந்து விளங்கிய தமிழகம், இப்போது பரிகாசத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழக மக்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வாய்ப்பு தேர்தல்தான் என்று அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts