background img

புதிய வரவு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை அடகு வைத்துவிடுவார் கருணாநிதி! - விஜயகாந்த்

தருமபுரி: ஆறாவது முறையும் முதல்வர் வாய்ப்பை கருணாநிதிக்கு வழங்கினால் தமிழகத்தை அடமானம் வைத்துவிடுவார், என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., காயிதே மில்லத், அம்பேத்கர் ஆகியோர் பொதுவாழ்வில் கதாநாயகர்கள். ஆனால் முதல்வர் கருணாநிதியோ வில்லன்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனப் போக்கு உள்ளது. 2012-ல்தான் முடியும் என்கின்றனர். ரூ.500 கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்தை, ரூ.1,200 கோடியில் செயல்படுத்துகின்றனர்.

ஜப்பான் சென்று நிதி பெற்றுவருவதாகக் கூறுகிறார் துணை முதல்வர். ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் இருந்து இனி தொடர்ந்து நிதி வருமா என்பது சந்தேகமே.

தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாதவர், குடும்பத்தினரைப் பாதுகாக்க மட்டும் டெல்லி செல்கிறார். சி.பி.ஐ. விசாரணை வீட்டில் நடைபெறக் கூடாது என்பதற்காக அறிவாலயத்தில் நடைபெறச் செய்தவர். விசாரணை எங்கு நடந்தாலும் வெட்கக்கேடுதான்.

மனிதனுக்கு ரத்தம் எப்படி முக்கியமோ, விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் மின்சாரம் முக்கியத் தேவை. ஆனால், கடும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ் இனத்துக்காகப் போராடுவதாக கூறும் திருமாவளவன், மருத்துவ சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் சென்னை வந்தபோது அனுமதி மறுக்கப்பட்ட நாளிலேயே தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். தமிழக மக்கள் கடந்த தேர்தலில் தவறான முடிவு எடுத்துவிட்டனர். தி.மு.க. கூட்டணியை கொள்கை கூட்டணி என்கின்றனர்.

உண்மையில் அது கொள்ளைக் கூட்டணி. திருவாரூரில் கூட்டணித் தலைவர்கள் கூடினார்கள். ஆனால் இங்கு கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். இதுதான் உண்மையான கூட்டணி," என்றார் அவர்.

நானும் ரோஷக்காரன்தான்!

பின்னர் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகனுக்கு ஆதரவாகவும், தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கர், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் பி. பழனியப்பன், பென்னாகரம் வேட்பாளர் ந. நஞ்சப்பன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தும் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "சமூக நீதி காக்க பாளையங்கோட்டை சிறையைத் தவிர அனைத்துச் சிறைகளுக்கும் சென்றிருப்பதாகவும், விஜயகாந்த் எந்த சிறைக்கு சென்றார் என்றும் பாமக தலைவர் கேட்கிறார். எனது பெயரை அவர் குறிப்பிட மாட்டார், என்று சொல்லும்போது, நானும் குறிப்பிட மாட்டேன். நானும் ரோஷக்காரன்தான்.

எந்த சமூக நீதியைக் காக்க சிறை சென்றார் அவர். பேருந்துகளை உடைத்தும், குடிசைகளை எரித்தும், மரங்களை வெட்டியும் சிறைக்குச் சென்றிருக்கலாம்.

இரு சமூகத்தினரிடையே சாதி தீயை வளர்த்து அதில் குளிர்காய நினைக்கிறார்கள். ஆனால், கலவரத்துக்கு காரணமானவர்களை அந்தத் தீயே எரித்துவிடும். இரு சமூகத்தினருக்கு இடையே சாதி மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் நடத்துகிறது பாமக.

இந்த மோதலில் சிறைக்குச் சென்றவர்களுக்கு எந்தவித உதவியும் அளிக்கவில்லை. இதுவரை, வழக்கு விசாரணைக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுதான் சமூக நீதிக்காக சிறைக்கு சென்ற லட்சணமா?

டாஸ்மாக் கடைகளை தங்களது மகளிரணியை வைத்து மூடுவதாக அறிவித்தார். இப்போது, தேர்தலுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து பேசலாம் என்கிறார். பாமக எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.

கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக செயற்குழு, பொதுக் குழுவை கூட்டி பெட்டிகள் வைத்து கட்சியினரிடம் வாக்குக் கேட்டு முடிவு செய்தார்கள். இப்போது, திமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தப் பெட்டி வைத்து முடிவு செய்தனர்?

எனது உருவ பொம்மையை பாமகவினர் எரிப்பதால், நெருப்பு வைத்து என்னை மிரட்ட முயற்சிக்கின்றனர். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். தேமுதிக தொண்டர்களாலும் இத்தகைய செயல்களில் ஈடுபட முடியும். அந்த வழியில் தொண்டர்களை நான் ஈடுபடுத்தமாட்டேன்.

மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றிருந்தபோது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலோ, கல்லூரிகளிலோ மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலோ பாமக தங்களது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை?

ஆனால், நான் சொந்தப் பணத்தில் ஏழை, எளியோருக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். 25 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கி வருகிறேன். இலவச கம்ப்யூட்டர் மையங்களை மாவட்டந்தோறும் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கலப்புத் திருமணங்களையும், இலவசத் திருமணங்களையும் நடத்தி வருகிறேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்.

எனது, கல்வி நிறுவனத்துக்கு அருகே ஏழைகளுக்காக ரூ.40 லட்சத்தில் திருமண மஹால் கட்டியுள்ளேன் என்றார் விஜயகாந்த்.

சுயநலத்துக்காக பசுமைத் தாயகம்

அணைக்கட்டு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.பி.வேலுவை விஜயகாந்த் பேசுகையில், "தே.மு.தி.க.வில் ஏழைகளுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளேன். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்க விட மாட்டேன்.

தி.மு.க. அதிகார மையமாக உள்ளது. கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தமிழகத்தை கூறுபோட்டு கொண்டுள்ளனர். சினிமா துறையும் அவர்கள் கைகளுக்குள் சென்றுவிட்டது.

டாக்டர் ராமதாஸ் சுயலாபத்துக்காக பசுமைத் தாயகம் அமைப்பை நடத்துகிறார். அவரை நம்பிய சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்?

மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி வந்த நான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் இன்றைக்கு கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறார்கள்.

கரும்புத் தோட்டத்துக்கு யானையை காவல் வைத்ததுபோல், தமிழகத்துக்கு கருணாநிதியை காவலாக வைத்தால் தமிழகம் உருப்படுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்," என்றார் விஜயகாந்த்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts