background img

புதிய வரவு

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வரவில்லை: ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி : ""தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம்'' என, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை ஆதரித்து, துணைமுதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள், உங்களை தேடிவரவில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளோம். ஆனால், சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். பின்னர், காணாமல் போய்விடுவர். அவர்களுக்கு தமிழக நலனில் அக்கறையில்லை. மாறாக, கொடநாடு நலன் தான் முக்கியம். 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் தரப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையை அவர், கதாநாயகன் என்று வர்ணித்தார். அதுபோல, 2011 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் இருப்பதால், இந்த அறிக்கையை முதல்வர், கதாநாயகி எனக் கூறியுள்ளார். ஆனால், எதிரணியில் முன்னாள் கதாநாயகி, முன்னாள் கதாநாயகன் உள்ளனர். கடந்த தேர்தலில் ரேஷனில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். தற்போது, அது ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

1989ல், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அதை ஜெ., நிறுத்தினார். 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த உதவித்தொகை 5,000த்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. 2006ல், ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வரானதும் அத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்வர் கருணாநிதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதனால், அவர் ஆறாவது முறையாக முதல்வராவது உறுதி. நாங்கள் சொன்னதை செய்தோம். செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறோம்.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பாதாள சாக்கடை திட்டம், பக்கிள் ஓடை (கழிவு நீர் ஓடை) திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு இன்ஜினியரிங் கல்லூரி துவங்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான 500 படுக்கை வசதி கொண்ட கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரத்தில் மீனவர்களுக்காக, தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நலவாரியம் அமைத்துள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தில் உதவித்தொகை 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எஞ்சியுள்ள ஒரு சதவீதம் பேருக்கும் அது வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts