background img

புதிய வரவு

கடாபியை கொல்லும் திட்டம் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா விளக்கம்

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts