background img

புதிய வரவு

தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.,

தஞ்சாவூர்: கருணாநிதியின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்று கனிமொழி கூறினார்.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன், தி.மு.க., வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து, கனிமொழி எம்.பி., வேனில் இருந்தபடி பேசியதாவது:"ஆண்டவனுடன் கூட்டணி' என, தி.மு.க., ஒருபோதும் கூறாது. "மக்களோடு கூட்டணி' என, யார் யாரோ கூறுகின்றனர். கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை, ஐந்தாண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதைக் கூறி, தலை நிமிர்ந்து கருணாநிதியும், தி.மு.க.,வினரும்தான் மக்களோடு கூட்டணி என கூற முடியும்.எதிர் கூட்டணியினர், "இதை நாங்கள் செய்துள்ளோம்' என, ஒரு வார்த்தை கூட கூற முடியாது. கருணாநிதியையும், தி.மு.க.,வினரையும் வசைபாடத்தான் தெரியும்.சுயமாக சிந்திக்கத் தெரிந்திருந்தால் எதிரணியினர் முன்னதாகவே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை அடியொற்றி அறிக்கை விட்டுள்ளனர். கம்யூனிஸ்டுகள் கேரளத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்கள் மக்களை கெடுக்கும் எனக்கூறிய அவர்கள், கேரளத்தில் நிதிநிலை அறிக்கையிலும், மேற்கு வங்க தேர்தல் அறிக்கையிலும் கருணாநிதியின் திட்டங்களை பின்பற்றி உள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக கருணாநிதி திட்டங்கள் உள்ளன. அதை மாற்ற தமிழக மக்கள் நினைக்க மாட்டார்கள். சிலர் தோற்றுப்போனதும், மலை உச்சிக்கு ஓடிச்சென்று உயர நினைக்கின்றனர். 13 ஆண்டு ஆட்சியில் இல்லாதபோதும் தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகளுக்காக போராடி, சிறை சென்றனர்.ஜெயலலிதா தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவார். தேர்தல் நெருங்கும்போது அறிக்கை விடுவார்.தி.மு.க.,வின் கடந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் சிதம்பரம், "கதாநாயகன்' என்று கூறினார். இம்முறை பெண்களுக்கான பல திட்டங்கள் உள்ளதால் இந்த தேர்தல் அறிக்கையை, "கதாநாயகி' என, கருணாநிதி கூறினார்.கடந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது, நகரங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல், 600 ரூபாய் என்று இருந்தது. தி.மு.க., ஆட்சியில் நெல் ஆயிரத்து 50 ரூபாயாகவும், கரும்பு டன் ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வீடு தேடி, வேலை செய்யும் இடம் தேடி இடுபொருட்கள் வந்து சேரும், கருவுற்ற மகளை தாய் காப்பதுபோல, பணிபுரியும் பெண்களுக்கு நான்கு மாதம் விடுமுறை என அறிவித்துள்ளோம்.அ.தி.மு.க.,வினரால், "அம்மா' என அழைக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள், பெண் ஊழியர்கள் இரவு உடையில் கைது செய்யப்பட்டு இரவில் இழுத்துச் செல்லப்பட்டனர். உடையைக்கூட மாற்ற அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அவர் ஆட்சியில் பட்டபாடு அனைவருக்கும் தெரியும்.ஜெயலலிதா மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். "இத்தனை ஆண்டு மாறாத அவர் இனிமேலா மாறப்போகிறார். "அவர் ஆணவம் பிடித்தவர்' என, நான் கூறவில்லை. கருணாநிதி கூறவில்லை. அவரோடு பல ஆண்டுகள் இருந்த வைகோ கூறுகிறார்.

அவர் பத்திரிகையாளர்களை அழைத்து பேசலாம். ஆட்சிக்கு வந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் எனவும் தெரியும். அப்படிப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி வராது. வந்தால் நமக்கு பயம், அச்சம்தான் அவரை நினைத்து தோன்றும்.சரித்திரத்தில் தான் பொற்கால ஆட்சியை படித்துள்ளோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நலத்திட்டங்கள் பெற்ற ஆட்சியாக கருணாநிதி ஆட்சி திகழ்கிறது.தி.மு.க., ஆட்சி நாத்திகர்கள் ஆட்சியல்ல. மக்களை மதிக்கத்தெரிந்த கருணாநிதி, ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடினார். இந்நகருக்கு, ரூ. 25 கோடி ஒதுக்கினார். பல கோவில்களில் குடமுழுக்கு நடத்தினார்.அவர் ஆட்சியில் பாரபட்சமின்றி, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியில் இதுபோல நடந்ததில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எதிரணியினர் உட்பட மூன்று லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்லும் உங்கள் குழந்தைகள் மடியில் லேப்-டாப் தவழ தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு கனிமொழி பேசினார்.

வேட்பாளர் உபயதுல்லா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், நகராட்சி தலைவர் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts