background img

புதிய வரவு

கூட்டு முயற்சியால் வெற்றி: இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் வழிகாட்டி; டோனி பாராட்டு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அரை இறுதிப்போட்டியில் இந்தியா 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. தெண்டுல்கர் 85 ரன்னும், ஷேவாக் 25 பந்தில் 38 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 5 விக்கெட்டுகள், அஜ்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 49.5 ஓவரில் 231 ரன்னில் “ஆல்-அவுட்” ஆனது. ஜாகீர்கான், நெக்ரா, முனாப்பட்டேல், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 260 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். ஆனால் மிகவும் கவனமுடன் விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீச்சினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடுவார்கள் என்று கருதியும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதிதான் அஸ்வினை நீக்கிவிட்டு 3-வது வேகப்பந்து வீரரை சேர்த்தேன்.

ஆடுகளம் குறித்து நான் கணித்தது தவறானது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து திரும்பியது. ஆனாலும் எங்களது வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நெக்ரா, ஜாகீர்கான், முனாப்பட்டேல் நன்றாக வீசினார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கரின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் உதவியாக உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் மிக சிறந்த வழிகாட்டி. ஆசிஷ் நெக்ரா குறித்து விமர்சிக்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி. ஆனால் அவர் சிறப்பாக பந்து வீசியதை அனைவரும் பார்த்து இருப்பார்கள்.

ரெய்னாவின் 36 ரன் என்பது மிகவும் சிறப்பானது. 50 ஓவர் வரை ஆடியது முக்கியமானது. இதற்கு ரெய்னா தான் காரணம். பேட்டிங்கில் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அணியில் தனிப்பட்டவர்களின் செயல்பாடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு வரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒவ்வொரு வரும் அணியின் வெற்றிக்காகவே ஆடுகிறார்கள். வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெற்றோம். இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts