background img

புதிய வரவு

ஆந்திர சட்டசபையில் ரகளை: எம்.எல்.ஏ.வை தாக்கிய ராஜசேகர ரெட்டி தம்பி; அமளியால் சபை ஒத்திவைப்பு

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்தரெட்டி விவசாயத் துறை மந்திரியாக இருக்கிறார். ஆந்திர சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் ஆட்சியில் நிலமோசடி நடந்ததாக எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷ மிட்டனர். இதற்கு பதிலடியாக இன்று சட்டசபை கூட்டம் நடந்தபோது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகர ரெட்டி ஊழல்வாதி என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி இருந்தனர்.

இது ராஜசேகரரெட்டியின் தம்பியான மந்திரி விவேகானந்த ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணநாயுடு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டார்கள் என்று விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த ரெட்டி முத்துகிருஷ்ண நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்றார். அப்போது முன் வரிசையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரமேஷ் கையில் இருந்த அட்டையை பறித்து கீழே வீசி விட்டு அவரை தாக்கினார்.

இதனால் விவேகானந்த ரெட்டியை ரமேஷ் கீழே தள்ளி விட்டார். இதில் தடுமாறி விழுந்த அவர் மீண்டும் முத்துகிருஷ்ண நாயுடுவை தாக்க ஓடினார். இதனால் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓடிவந்து விவேகானந்த ரெட்டியை தடுத்துனர். இதை பார்த்ததும் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை தாக்க முயன்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் சபையை உடனடியாக ஒத்திவைத்தார்.

அப்போது முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி விரைந்து வந்து விவேகானந்த ரெட்டியை தனது அறைக்கு அழைத்து சென்று அமைதிபடுத்தினார். விவேகானந்த ரெட்டி ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து மந்திரி சபையில் இருக்கிறார். மந்திரி என்ற காரணத்தால் தனது துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல சட்டசபைக்கு வந்து இருந்தார். சட்டசபை உறுப்பினரை அவர் தாக்கியதால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் ஆவேசத்துடன் காணப்பட்ட விவேகானந்த ரெட்டி கோபமாக கூறும்போது என் குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு மந்திரி பதவியே தேவையில்லை என்று கூறினார். எனவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி உள்ளார். அதில் சேராமல் விவேகானந்த ரெட்டி காங்கிரசிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts