background img

புதிய வரவு

ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் விவகாரம்: சட்டசபையில் தி.மு.க. அ.தி.மு.க. கடும் அமளி; பட்ஜெட் புத்தகத்தை தூக்கி எறிந்தனர்

சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் பேசும் போது கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடிக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினார். அவர் ஆசைபடுவது தவறல்ல. ஆனால் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எப்படி முதல்-அமைச்சராக வரமுடியும். ஓய்வெடுப்பதாக சொல்லி கொண்டிருக்கும் அவரை எப்படி முதல் - அமைச்சராக்குவார்கள். (அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து குரல் கொடுத்தனர்.)

அன்பழகன்:- எதிர்க்கட்சி தலைவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. பூரண ஓய்வு எடுப்பவரை எப்படி முதல்-அமைச்சர் ஆக்குவீர்கள் என்று தான் சொன்னேன். இதில் உங்களுக்கு என்ன கடுப்பு (அ.தி.மு.க. வினரை பார்த்து) தீர்மானத்தில் அப்படி வார்த்தை இல்லையென்றால் வாபஸ் பெற்று கொள்கிறேன்.இது ஒன்றும் தவறான வார்த்தை இல்லையே.

சபாநாயகர்:- உழைத்தவர்கள் ஓய்வில் இருப்பார்கள். இதில் என்ன தவறு.

அன்பழகன்:- என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத்தில் கூட தான் ஆஜராக முடியாததற்கு (ஜெயலலிதா) தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட பூரண ஓய்வு தேவை என்ற தீர்மானத்தை அங்கே சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்:- புரட்சித் தலைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த சட்டமன்ற தொடருக்கு மட்டும் வர முடியாது என்பதால் தான் தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதை அரசியல் ஆக்கும் வகையில் நிதி அமைச்சர் பேசுவது சரியல்ல.

அன்பழகன்:- ஓய்வு எடுக்கும் ஒருவரே முதல்- அமைச்சராக மீண்டும் வருவார் என்று சொல்லும் போது இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்- அமைச்சரால் (கருணாநிதி) அதை காப்பாற்றி கொள்ள முடியாதா? இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று அமைச்சர்களுடனும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்- அமளி நிலவியது. இறுதியில் செங்கோட்டையன் பேசும் போது, நிதி அமைச்சர் அன்பழகன் பேசிய வார்த்தை வாபஸ் பெறப்படாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தக தாள்களை கிழித்து வீசினார். திருத்தணி அரி எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை தூக்கி வீசினார். இதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts