background img

புதிய வரவு

'நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன்'..அதிமுக-மதிமுக வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் இருந்து அதிமுக, மதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செ.மா. வேலுச்சாமி பேச தொடங்கும்போது, சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் 25 நிமிடம் என்றார். இதை தொடர்ந்து நடந்த விவாதம்:

செ.மா. வேலுச்சாமி: இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. நாடு முழுவதும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலி டீத்தூள், போலி ரேசன் கார்டு, போலி மருந்து, போலி போலீஸ் என உள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டுள்ளது. வெங்காய விலை உங்கள் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது.

உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு: வெங்காயத்தை வைத்து ஆட்சி மாற்றம் வரும் என நினைக்கிறீர்கள். வெங்காய விலை இப்போது சரிந்து விட்டது. கிலோ 10 ரூபாய்க்கு நான் வாங்கித் தரவா?

செ.மா. வேலுச்சாமி: நீங்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் புரட்சித் தலைவியின் திட்டங்களை மிஞ்ச முடியாது. இலவச காங்கிரீட் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.75,000 கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிக்க ரூ.2 லட்சம் ஆகிறது. எனவே இது மக்களை கடனாளியாக்கும் திட்டமாகிவிட்டது.

அமைச்சர் பொன்முடி: 2001ல் அதிமுக ஆட்சி கவர்னர் உரையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தை அறிவித்தீர்கள். இதுவரை எத்தனை வீடு கட்டிக் கொடுத்தீர்கள். விவரம் கூறத் தயாரா?.

இதற்கு பதிலளிக்காத செ.மா வேலுச்சாமி, நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு தி.மு.க. ஆட்சியை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசி கொண்டிருக்கும் போதே 25 நிமிடம் ஆகிவிட்டதால் சபாநாயகர் அடுத்து தி.மு.க. உறுப்பினரான அப்பாவுவை பேச அழைத்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் எழுந்து, செ.மா. வேலுச்சாமி தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டு்ம் என்றார்.

ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட 25 நிமிட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறிவிட்டதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத்தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டமன்ற ஆய்வுக்குழு வில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 35 நிமிடத்திற்கு பதில் 25 நிமிடமே பேச அனுமதி தந்துள்ளார்கள். மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் அ.தி.மு.கவுக்கு பேச வேண்டிய நேரத்தை குறைக்கிறார்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

இது குறித்து அதிமுக எம்எல்ஏ மதுசூதனன் கூறுகையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பேச 35 நிமிடங்கள் அளிக்கப்படும் என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 25 நிமிடங்கள் மட்டுமே சபாநாயகர் வழங்குகிறார். தொடர்ந்து 2வது நாளாக சபாநாயகர் இதே மாதிரி செயல்படுவதால் மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தக்களை அவையில் முன் வைக்க முடியவில்லை. இது ஜனநாயக படுகொலை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts