background img

புதிய வரவு

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு-சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள தகவல் விஷமத்தனமானது, தவறானது, நடவடிக்கைக்கு உரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசின் விருப்புரிமையின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுவது தொடர்பாகவும், அது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு அளித்துள்ளார்.

இந் நிலையில் சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கையை சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி முதலமைச்சர் ஆகிய என் மீது வழக்குத் தொடர தமிழக கவர்னரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்றைய தினம் அனுமதி கோரியுள்ளார் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைககள் ஆகியவற்றில் 85 சதவிகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதும், மீதியுள்ள 15 சதவிகிதம் வீடுகள் மற்றும் மனைகளை அரசு தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுவதும் எல்லா ஆட்சி காலத்திலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.
அரசு தனது விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்த வீடுகளில் முறைகேடு நடைபெற்று விட்டதாக சுப்பிரமணிய சாமி சொல்லியிருக்கிறார்.

அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது திமுக ஆட்சிலே மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சியல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் இப்போது போலவே விருப்புரிமை ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும்.

அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள் கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணிபுரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், விடுதலைபோராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள், அப்பழக்கற்ற அரசு ஊழியர் ஆகியோர் விண்ணப்பங்கள் கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசால் விருப்புரிமையை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீடுகள் சலுகை விலையில் அளிக்கப்படுவதில்லை. குறைவானதொகைக்கும் தரப்படுவ தில்லை. அரசு ஒதுக்கீடு தொகையே வசூலிக்கப்படுகிறது.

எனவே இதில் எந்த வகையிலும் நிதி இழப்பு இல்லை. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாக சொல்லப் படும் செய்தி விஷமத்தனமானது. இந்த செய்திக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் கொடுக்கப்பட்டால் அதில் உண்மையிருந்தால் அரசு நடவடிக்கை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டிசம்பர் மாதம் 7ம் தேதி செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோல வீட்டு மனைகள் ஏராளமானோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. அ.திமு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ்க்கு 1993ம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசன் என்பவருக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.கவின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993ம் ஆண்டு வீடு, 2004ம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர்.நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி;

நீதியரசர் எஸ்.ஆர். சிங்காரவேலுக்கு 2005ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்ட மன்ற உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ் என்பவருக்கு 1994ம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த நடராஜன், ஐ.ஏ.எஸ்க்கு 1995ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; ஆதி. ராஜாராமுக்கு 1995இல் 3101 சதுர அடி., 1993ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி;

எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ்.ஆண்டித் தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994ல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.

2005ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உண்டு.

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலே அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் இதுபோல அரசாங்கம் விரும்புவோருக்கு வீடுகளை, மனைகளை வழங்கலாம் என்ற முடிவே அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே தான் எடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை 25-1-1979ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகள் என்பதற்கு மாறாக 1991-1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 15 சதவீத வீடுகளை அல்லது மனைகளை அரசு தனது விருப்புரிமை அடிப்படையிலே வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

உண்மை இவ்வாறு இருக்க சுப்பிரமணிய சாமி விஷமத்தனமாக இந்த செய்தியை திரித்து வெளியிட்டு இருப்பது உள்ளபடியே வருந்தத்தக்கது, தவறானது, நடவடிக்கைக்குரியது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts