background img

புதிய வரவு

தமிழகத்தில் ஜாதி கொடுமை உள்ளது:ஆத்தூர் விழாவில் ஸ்டாலின் பேச்சு

ஆத்தூர்:""பிறக்கும்போது ஆண், பெண் குழந்தையென்றும், வளர்ந்ததும் ஜாதி பெயரை சொல்லி அடையாளம் காட்ட வேண்டிய, "ஜாதி கொடுமை' தமிழகத்தில் இருந்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினரால் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது,'' என, தமிழக, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரத்தில், 2.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமத்துவபுர குடியிருப்பு வீடுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


270 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டியும், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல்நிதி வழங்கியும், அரசு நலத்திட்ட உதவி வழங்கியும், தமிழக, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மகளிர் சுய உதவி குழுவினர், 1,848 பேருக்கு, அரசு மானியத்துடன், 11.09 கோடி ரூபாயும், 352 குழுக்களுக்கு, 14.09 கோடி ரூபாய், பத்து குழுவிற்கு, 1.90 கோடி ரூபாய், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில், 65 மகளிர் குழுக்களுக்கு, 4.69 கோடி ரூபாய் என, 2,278 குழுக்களுக்கு, 31.76 கோடி ரூபாய் சுழல்நிதி வழங்கப்படுகிறது.
வீட்டில் குழந்தை பிறந்தவுடன், ஆண், பெண் குழந்தை எனவும், அதே குழந்தை வளர்ந்ததும், ஜாதி பெயரை சொல்லி அடையாளம் காட்ட வேண்டிய, "ஜாதி கொடுமை' இங்கு உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.


மாநகர், நகரம் மற்றும் குக்கிராமங்கள் வரை பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில், 1971ல், முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் கொண்டு வந்தார். குடிநீர் திட்டத்தில் நகரம், ஊரக பகுதியில், 2001-06 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2,843.50 கோடி ரூபாய், குடிநீருக்காக செலவிடப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டில், 4,246 கோடி ரூபாய், குடிநீருக்கு செலவு செய்துள்ளோம். சேலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், தலைவாசல், கெங்கவல்லி உள்பட 12 யூனியன்களில், 1,345 குடியிருப்புகளுக்கு, 270 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான, டெண்டர் பணி வரும், 10ம் தேதி நடக்கிறது.


அதன்பின் நகர மக்களுக்கு நாள்தோறும், 90 லிட்டரும், பேரூராட்சியில், 70 லிட்டர், கிராமங்களில், 40 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அரசு நலத்திட்ட உதவிகளை, தனி விமானம் மூலம் வந்து வழங்குவதில்லை. தரைவழி சாலையில் காரில் வந்து வழங்குகிறேன். மாநிலம் முழுவதும் உள்ள, ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 878 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 120 மணி நேரம் மேடையில் நின்று சுழல்நிதி வழங்கியுள்ளேன்.


நலத்திட்ட உதவிகளால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வருவதோடு ஆறாவது முறையாக முதல்வர் கருணாநிதி பணி செய்வார்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.விழாவில் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், எம்.பி.,கள் ஆதிசங்கர், செல்வகணபதி, துணை சபாநாயகர் துரைசாமி, எம்.எல்.ஏ.,கள் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா, தலைவாசல் சின்னதுரை, ஆத்தூர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts