background img

புதிய வரவு

மூன்றாம் நாளாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.,க்கள் சபையில் அமளி

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், கடும் அமளி நிலவியது. தனி தெலுங்கானா, எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் போன்ற விவகாரங்களை எழுப்பி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில், கவர்னர் துவக்க உரையாற்றிய போது, தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும், ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இப்பிரச்னையால், இரண்டு நாட்களாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சபை கூடியதும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இப்பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர், "சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., நாகம் ஜனார்த்த ரெட்டி, சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்.
இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நிலவியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் (ஜெகன் மோகன் ஆதரவு) மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தை எழுப்பி, கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு பின் இரண்டு முறை சபை கூடியும், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உதவி சபாநாயகர் நாதெந்லா மனோகர் ஆலோசனை நடத்தினார்.
உஸ்மானியாவில் பதட்டம் : தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல, அவர்கள் முயற்சித்தனர். பல்கலை நுழைவாயிலிலேயே அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதட்டம் உருவானது. கடும் முயற்சிக்கு பின், மாணவர்கள் ஊர்வலம் செல்லும் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மேலும், தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷன் மீது, திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts