background img

புதிய வரவு

பிரதமர் மன்மோகன் சிங் மீது ஜெயலலிதா கடும் சாடல்

சென்னை : "பிரதமர் மன்மோகன் சிங், நாட்டை தொற்றிக் கொண்டிருக்கும் அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும் மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர்' என, ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பிரச்னைகள் குறித்து ஊடகங்களுடன் கலைந்துரையாடிய போது, கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் விவகாரங்களை சமாளிப்பதில், திறம்ப செயல்பட முடியாத தன் பரிதாபமான இயலாமையை, திரும்பத் திரும்ப ஒப்புக் கொண்டது, அவரது கையாலாகாத்தனத்தையே எடுத்துக் காட்டியது.
தன் அரசின் பெரும்பாலான தோல்விகளுக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்ட சமரசங்கள் தான் காரணம் என்பதை, சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார் மன்மோகன் சிங். லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இமாலய ஊழலை நிகழ்த்தியவர் என்ற குற்றச்சாட்டிற்கு ராஜா ஏற்கனவே ஆளாகியிருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக கூட்டணி அரசு அமைந்த போது, ராஜாவை தொலை தொடர்புத் துறை அமைச்சராக மீண்டும் நியமனம் செய்ததற்கு, கூட்டணி கட்சியின் நிர்பந்தம் தான் காரணம் என, பிரதமர் தெரிவித்திருக்கிறார். அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடத்தில் தான் இருக்கிறது என, அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து தன் கட்சித் தலைவருடனும், கூட்டணி கட்சி தலைவர்களுடனும் கலந்து ஆலோசிப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அமைச்சரை தேர்ந்தெடுப்பதில், தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்றும், இவ்விஷயத்தில் தன் கைகள் கட்டப்பட்டு விட்டன என்றும் பிரதமர் ஒப்புக் கொண்டிருப்பது, இந்திய அரசியல் சாசனத்தையே முற்றிலும் அவமதிப்பது போல் உள்ளது.
"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை ராஜா எடுத்த போது மவுனம் சாதித்தது குறித்த கேள்விக்கு, "தான் அது குறித்து கடிதம் எழுதியதாகவும், எந்த தவறுக்கும் இடமில்லை' என, ராஜா கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். ராஜா அளித்த உறுதியின் அடிப்படையில், நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டதை பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தனக்கு தெரியாது என, பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் நிச்சயமாக சொல்லியிருக்கக் கூடாது. பிரச்னையில் தலையிட்டு, நாட்டின் சொத்து சுரண்டப்படுவதைத் தடுத்து இருக்க வேண்டும். ஆனால், கூட்டணி தர்மம் என்ற தெளிவற்ற காரணத்தைக் காட்டி, பிரதமர் வாய் மூடி மவுனியாக இருந்து விட்டார். இது தான் இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கும் வருத்தம் தோய்ந்த உண்மை நிலை.
தன் அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாததோடு மட்டுமல்லாமல், எல்லை மீறி பிரச்னைகள் செல்லும் போது, அதில் தலையிட முடியாத ஒருவரை நாம் பிரதமராக பெற்றிருக்கிறோம். "எஸ் - பாண்ட்' அலைக்கற்றையை, இஸ்ரோ ஒதுக்கியது, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் போன்ற கூட்டணி தர்மத்திற்கு தொடர்பில்லாத வினாக்களுக்கும் திருப்திகரமான பதில்களை பிரதமர் தரவில்லை.
மொத்தத்தில், பிரதமரின் ஊடகங்களுடனான நேரடி கலந்துரையாடல் என்பது, வெடிக்காத பட்டாசு போல், புஸ்வானமாக அமைந்ததோடு, அவலமானதாகவும் இருந்தது. இதன் மூலம், கூட்டணி தர்மம் என்ற எளிதில் உடையக் கூடிய கண்ணாடி போன்ற பலவீனமான கேடயத்தை பயன்படுத்தி, இந்நாட்டை தொற்றிக் கொண்டிருக்கிற அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும், மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts