background img

புதிய வரவு

மத்திய அரசு நிதியை முறையாக செலவழிக்க ப.சிதம்பரம் அறிவுரை

திருநெல்வேலி : மத்திய அரசு நிதியினை மாநில அரசுகள் சொந்த நிதி போல முறையாக செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

நெல்லை மாவட்டம் சிவகிரியில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி நடத்திய மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு பிறகு சிவகிரிக்கு வந்துள்ளேன். 2004 பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா 137 இடங்களையும் 8 இடங்களில் அதிகமாக 145 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பிடித்தன. அப்போதைய காங்.,அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவிதிட்டம், மாணவர்களுக்கு கல்வி கடன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் 2009ல் மீண்டும் காங்.,ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த பாரதிய ஜனதாவோ முன்பை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றது. இப்போதும் பா.ஜ.,ஏதாவது குறைகளை கண்டுபிடித்து சொல்லிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு ரூ 12 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள், 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன், காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் கோடி செலவில் 13 கோடி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். 2008ல் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வங்கிகள் நிலைகுலைந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின.

ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுவிட்சர்லாந்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் நான் பங்கேற்ற போது இந்தியாவும், சீனாவும் மட்டும் பொருளாதார வீழ்ச்சியடையாமல் இருப்பது குறித்து என்னிடம் உலகத்தலைவர்கள் கருத்து கேட்டனர். 2008-2009 ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, 20009-10ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சிபெற்றது. நடப்பு ஆண்டில் 9 சதவீதமாக உயரும். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை வழங்குகிறது. மாநில அரசுகள் அந்த நிதியை சொந்த நிதி போல முறையாக திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை சில இடங்களில் தவறாக பயன்படுத்துகிறார்கள். சோனியா, மன்மோகன், ராகுல் உள்ளிட்ட சுயநலமில்லாத தலைவர்களால் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. எனவே இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது. விரைவில் தேர்தல் திருவிழா நடக்க இருப்பதால் உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என ப.சிதம்பரம் பேசினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts