background img

புதிய வரவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த திருத்தலத்தில் மட்டும்தான் முருகப் பெருமான், தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.


இதனையொட்டி ``திருப்பரங்குன்றம் திருமணத்தலம்'' என்று பக்தர்களால் வர்ணிக்கப்படுகிறது. கோவில்கள் தோறும் மூலஸ்தானத்தில் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலஸ்தானத்தில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடப்பதில்லை. காரணம் மலையை குடைந்து மூலஸ்தானம் அமைந்து உள்ளது.

குடைவரை கோவில் என்பதால் மூலஸ்தானத்தில் அபிஷேகம் இல்லை. இதே சமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள `வேலுக்கு' அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. அது பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

தனி சிறப்பு :

பெரும்பாலான கோவில்களில் மூலஸ்தானத்தில் ஒரு கருவறை அமைந்து இருக்கும். ஆனால் இங்கு சுப்பரமணியசுவாமி, சத்திய கிரீஸ்வரர், கோவிர்த்தனாம் பிகை, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் அமைந்து உள்ளது.

இதுபோன்று வேறு கோவில்களில் காணக் கிடைக்காது. இதுவே திருப்பரங்குன்றம் கோவிலின் தனி சிறப்பு. சண்முகர், உற்சவர், செந்திலாண்டவருக்கு என்று தனித்தனி சன்னதி உள்ளது.

கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் வாகனமான நந்தி, முருகப் பெருமானின் வாகனமான மயில், விநாயக பெருமானின் வாகனமான மூஞ்சுறு ஆகிய 3 வாகனங்கள் ஒரே இடத்தில் அமைய பெற்றுள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு மாதமும் 2 முறை பிரதோஷம் நடந்து வருகிறது.

தென்மண்டலத்தில் உள்ள கோவில்களில் பெரிய நந்தி இருப்பது இங்குதான். பெரிய, பெரிய கோவில்களில் 9 நவக்கிரகங்கள் அமைந்து இருப்பதை பார்க்கலாம், தரிசனம் செய்யலாம்.

ஆனால் இங்கு சனீஸ்வரருக்கு என்று தனி சன்னதி உள்ளது. இதுவும் இந்த கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகிறது. குரு பகவானான தட்சணா மூர்த்திக்கும் இங்கு தனி சன்னதி அமைந்து உள்ளது.

குன்றத்தில் மயில்கள் :

முருகப்பெருமானுக்கு உகந்த வாகனமான மயில்கள் இருப்பது இயற்கை. முருக பெருமான் குடிகொண்டு ஆட்சி புரியும் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

ஒவ்வொரு வண்ண மயிலும் அதன் தோகையை விரித்து ஆடும்போது பார்க்க அழகாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணக்கூடிய அபூர்வ வெள்ளை மயில்களும் இங்கு காணப்படுகின்றன. இந்த வெள்ளை மயில்களை பார்ப்பதற்கு பக்தர்கள் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் சுற்றுலா பயனிகள் வந்து குவிகின்றனர்.

தென் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள வானுயர்ந்த மரங்களுக்கும், மலை முகடுகளுக்கும் இடையே வெள்ளை மயில்களை காண முடிகிறது. இதை கண்டுகளிப்பதில் அலாதியான இன்பம். நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் வெள்ளை மயில்களை கண்டுகளிக்கலாம்.

போக்குவரத்து வசதி :

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்து, ரெயில் வசதி உள்ளது. மதுரைக்கு சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு (திருப்பரங்குன்றம்) செல்ல வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts