background img

புதிய வரவு

கூட்டணிக் குளறுபடியின் பின்னணிகள்!

ஜப்பானைத் தாக்கிய ஆழிப்பேரலையைப் போல, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டபோது, அதிர்ந்து போய்விட்டனர் இடதுசாரிக் கட்சியினர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் வியப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர். எதற்காக இப்படி யாரையும் கேட்காமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தடாலடியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியாமல் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, அ.தி.மு.க.வினரே மிரண்டு போய்விட்டனர்.

÷வேடிக்கை என்னவென்றால், அண்ணா அறிவாலயத்தில் பல தி.மு.க. அமைச்சர்களேகூட இது உண்மையான அறிவிப்புதானா இல்லை ஏதாவது தவறு நேர்ந்து விட்டிருக்கிறதா என்று குழம்பிப் போய் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். பல பத்திரிகை அலுவலகங்களிலிருந்து ஜெயா தொலைக்காட்சி நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது நிஜமான பட்டியலா என்று மீண்டும் மீண்டும் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

÷ஒருவேளை யாராவது வேண்டுமென்றே தவறான ஈமெயில் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்களோ என்று பத்திரிகையாளர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், போயஸ் தோட்டத்திலிருந்து ஈமெயில் மூலம் மட்டுமல்லாமல் ஃபேக்ஸ் மூலமும் பட்டியல் ஜெயா தொலைக்காட்சிக்கும், நமது எம்.ஜி.ஆருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

÷தே.மு.தி.க.வுடன் கூட்டணி முடிவானதுமே, தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் பரவலாகவே பேச்சு வந்துவிட்டிருந்தது. வெற்றிக்களிப்பில் அ.தி.மு.க. அணி மிதந்து கொண்டிருக்கும்போது, தி.மு.க. அணியில் கூட்டணிக் குழப்பம் உச்சகட்டத்தில் இருந்தது. காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்க, தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்க, சமாதானம் ஏற்பட்டு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளைக் கொடுத்து தி.மு.க. சமாதானம் பேசியதுடன், 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என்பதையும் உறுதிப்படுத்திவிட்டது.

÷மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொண்ட தி.மு.க. கூட்டணி, சமரசமாக உடன்பாடு செய்து கொண்டதுடன் சுமுகமாகத் தொகுதிகளையும் பங்கிட்டுக் கொண்டுவிட்டபோது, பிரச்னையே இல்லாமல் ஒத்த கருத்துடனும் தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்கிற குறிக்கோளுடனும் இணைந்த அ.தி.மு.க. கூட்டணி, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் பிரச்னையை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இதற்குக் காரணம்தான் என்ன?

÷கடந்த 10 நாள்களாகவே அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்னையாகத் தொடர்வது ம.தி.மு.க.வின் நிலைமைதான்.

÷""கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்திருக்கும்போது, முதலில் எங்களுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டுத்தானே மற்றவர்களைப் பற்றியே அவர் யோசித்திருக்க வேண்டும். அவருக்கு ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல எங்களுக்குக் கட்சியை நடத்துவது முக்கியம். 6 சீட் வைத்துக் கொள், 9 சீட் தருகிறோம்' என்று கூறுவது எங்களை அவமானப்படுத்துவதாக இல்லையா? எங்கள் பொதுச் செயலாளர் வைகோ என்ன தவறு செய்தார் என்று நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்?'' என்கிற நியாயமான ஆதங்கம் ம.தி.மு.க.வினர் மத்தியில் நிறையவே இருக்கிறது.

÷இந்த நிலையில், பல முறை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் அ.தி.மு.க. சார்பில் பலரும் பேசி சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட வைகோவின் தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவராக இல்லை என்பதுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது.

÷கடைசியாக, புதன்கிழமை வைகோவை சந்தித்து சமாதானம் செய்ய அ.தி.மு.க. தரப்பிலிருந்து சசிகலாவின் மைத்துனர் (நடராஜனின் சகோதரர்) ராமச்சந்திரனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும் அனுப்பப்பட்டனர். இருவருமே "அம்மா'வின் ஏவலாளர்களாகச் சென்றார்களே தவிர, தன்னிச்சையாக சமரசம் பேசி ஜெயலலிதாவுடன் உடனுக்குடன் தொடர்பு கொண்டு முடிவெடுப்பவர்களாக அல்ல. மீண்டும் மீண்டும் நீங்கள் அம்மாவைப் பார்த்துப் பேசுங்கள் எல்லாம் முடிவாகிவிடும் என்று கிளிப்பிள்ளைபோலக் கெஞ்சினார்களே தவிர, வைகோவின் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

÷""நான் கட்சியை நடத்த வேண்டும். எனக்குக் குறைந்தது 21 இடங்களாவது தருவதாக இருந்தால் சொல்லுங்கள். அதற்கான உத்தரவாதம் இருந்தால் நான் தோட்டத்துக்கு வந்து மேடமை சந்திக்கிறேன். இல்லையென்றால், என்னை மன்னித்துவிடுங்கள். நான் தனியாகப் போட்டியிட்டால், கடந்த தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. பெற்ற வாக்குகளை இந்தத் தேர்தலில் நான் பெற்று, அடுத்த தேர்தலில் 41 இடங்கள் பேரம் பேசிக் கொள்கிறேன். நான் அங்கே வந்து உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசி, எங்களுக்கிடையில் இருக்கும் நல்லுறவை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை'' என்று கொஞ்சம்கூட ஆத்திரப்படாமல் சமாதானமாக இருவரையும் வைகோ அனுப்பி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

÷போயஸ் தோட்டம் வந்த ராமச்சந்திரனும், தோட்டக்கலை
கிருஷ்ணமூர்த்தியும், ""வைகோ முரண்டு பிடிக்கிறார். 21 இடங்களுக்குக் குறைவாக இருந்தால் பேச மறுக்கிறார்'' என்று ஜெயலலிதாவிடம் கூறியதும் அவர் ஒரேயடியாக "அப்செட்'.

÷ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவருக்கு வைகோ தனது அணியில் இருக்கவும் வேண்டும். அவருக்கு அதிகபட்சம் 10 முதல் 15 இடங்களுக்கு மேல் தரவும் கூடாது என்பதுதான் எண்ணம். அதற்குக் காரணம் அதிக இடங்களை ஒதுக்கினால், போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல் அந்த இடங்களில் ம.தி.மு.க. தோற்றுவிடும் என்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிப்பிராயம்தான்.

÷இந்த முறை சசிகலா உள்ளிட்ட யாரையும் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ஜெயலலிதா தலையிட அனுமதிக்கவில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவருக்குப் பட்டியல் தயாரிப்பதில் உதவியாக இருந்தவர் சசிகலாவின் சித்தப்பா மாப்பிள்ளையான ராவணன் மட்டுமே.

÷ஜெயலலிதா 60 முதல் 70 இடங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தாராம். ஜெயலலிதாவின் பட்டியல் அல்லாமல், சசிகலாவின் சகோதரர் திவாகரன், "புதிய பார்வை' நடராஜன், டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் என்று சசிகலா தரப்பு உறவினர்களின் சிபாரிசுடன் கூடிய ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருந்தாராம் ராவணன். அந்தப் பட்டியல்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி போன்ற தொகுதிகளுக்கு திவாகரன் சிபாரிசு செய்திருந்த அ.தி.மு.க.வினர் பெயரையும், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்குக்கூட சசிகலா குடும்பத்தினருக்கு வேண்டியவர்களின் பெயர்களையும் இணைத்திருந்தார் அவர்.

÷""இன்று வளர்பிறையிலேயே பட்டியலை வெளியிடுங்கள். வைகோவுடன் பேசிக் கொள்ளலாம்'' என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு பிறந்ததும், ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், ராவணன் தயாரித்து வைத்திருந்த 160 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு விட்டதுதான் குழப்பத்துக்குக் காரணமாகி, இப்போது ஜெயலலிதாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

÷""பட்டியலை வெளியிட்டவர்கள் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டிருக்கலாமே'' என்கிற பலரின் கேள்வியைத்தான் ஜெயலலிதாவும் போயஸ் கார்டனில் கேட்டு, அத்தனை பேரையும் டிரில் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

÷""தவறு நடந்துவிட்டது என்றதும் ஏன் அந்த அம்மாவே எங்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசக்கூடாது? ஜெயா தொலைக்காட்சியில் உடனேயே மாற்றுப் பட்டியல் வெளிவரும் என்று அறிவித்திருக்கலாமே?'' - இதுதான் இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் ஆவேசத்துக்குக் காரணம்.

÷ஜெயலலிதாவின் மிகப்பெரிய பலவீனம் கூட்டணிக் கட்சிகளுடன் சமரசம் பேசவும், எல்லோருக்கும் பொதுவான, அதேசமயம் ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்புடைய ஒரு நபர் இல்லாததும்தான் என்று தெரிவித்தார் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கியமான தலைவர் ஒருவர்.

÷""1998-ல் வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். 2001-ல் "விடுதலை' வீரமணி, "சோ' ராமசாமி, ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் இருந்தனர். இப்போது ஜெயலலிதா முன்னால் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது சொந்தத் தொகுதிக்கு வெளியே என்ன அரசியல் தெரியும்?'' என்று கேட்கிறார் அவர்.

÷அவர் சொல்வதுபோல, மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜனை சசிகலாவிடமும், கிருஷ்ணமூர்த்தியிடமும் கூட்டணி பற்றிப் பேசச் சொல்வதும், வைகோ போன்ற தலைவர்களை சமாதானம் செய்ய ராமச்சந்திரனை அனுப்பியதும் அ.தி.மு.க. தரப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்புடைய அரசியல். நெளிவு சுளிவுகள் தெரிந்த ஒருவர் கூட இல்லாத நிலையில் இதுபோன்ற கூட்டணிக் குழப்பங்களை அவரேயாவது நேரில் எதிர்கொள்ள முன்வர வேண்டும்.

÷""இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று பேசும்போதுகூட விஜயகாந்த் சொன்னது, "நமது முதல் இலக்கு தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான். முடிந்தவரை சமாதானமாகப் போக முயற்சிப்போம். இல்லையென்றால் மூன்றாவது அணி பற்றி யோசிப்போம்' என்பதுதான். ஜெயலலிதா மட்டும், விஜயகாந்த், வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் போன்றவர்களுடன் தொலைபேசியில் நேரிடையாகத் தொடர்பு கொண்டு, அவர்களை அழைத்துப் பேசினால் பிரச்னை முடிந்துவிடும்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.

÷அப்படியே சமரசம் ஏற்பட்டாலும், இனிமேல் அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக செயல்பட முடியுமா? முடியும் என்கிறார் இந்திய குடியரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன்.

÷""ஒருவரை ஒருவர் தரக்குறைவாகத் தாக்கிப் பேசிய பா.ம.க.வும், தி.மு.க.வும், காங்கிரஸýம் தி.மு.க.வும் சமரசமாகி விட்டனர். இதெல்லாம் பிரசாரத்தில் காணாமல் போய்விடும். தொகுதிப் பங்கீட்டின்போது பிரச்னை ஏற்படாமல் இதுவரை எந்தக் கூட்டணியாவது இருந்திருக்கிறதா சொல்லுங்கள்?'' என்பது தமிழரசனின் கேள்வி.

÷கூட்டணிக் குழப்பத்தின் பின்னணி தெரிகிறது. குழப்பம் தீர வேண்டும் என்றால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இவர்களை நேரிடையாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்கிறார்களே, அது சாத்தியமா? அது சாத்தியமாகும்போது மட்டுமே மூன்றாவது அணி சாத்தியமில்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும்!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts