background img

புதிய வரவு

தெலுங்கானா அமையுமா:சிதம்பரம் பேட்டி

புதுடில்லி:"தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முன்வரும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஒடிசாவில் மால்காங்கிரி கலெக்டர் உட்பட சிலர், நக்சலைட்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு திறமையாக கையாண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முதல்வர் நவீன் பட்னாயக் எடுத்த நடவடிக்கைகள் எனக்கு அதிருப்தி தந்ததாக வந்த தகவல்கள் தவறானவை. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம், அல்லது மறுக்கிறோம் என்பது முக்கியமல்ல. மாநில அரசால், இந்த விவகாரம் நல்ல முறையில் கையாளப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்னை. இந்த விவகாரத்தில், மாநில அரசின் செயல் பாராட்டத்தக்கது.
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்வந்து கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பான கூட்டம் நடத்தப்படும். இருப்பினும், இக்கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பதை சொல்ல முடியாது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆந்திராவில் உள்ள பிரதான எட்டு அரசியல் கட்சிகளும் அழைக்கப்படும் பட்சத்தில், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடத்தும்படி, பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். அதுபோல், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பாகிஸ்தானிலிருந்து வரும் உயர்மட்ட குழுவினரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம்.மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய துணை ராணுவத்தைச் சேர்ந்த 100 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts