டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை வழங்கும் திட்டத்தை பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி துவக்கி வைத்தார். உத்தரகண்ட் மாநிலத்தில், "அடல் காத்தியானா திட்டம்' என்ற 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை மற்றும் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நலிந்த பிரிவினரை சமூக, பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்ய, அரசியலை ஒரு கருவியாக கட்சி தலைவர்கள் பயன்படுத்த வேண்டும். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை மற்றும் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் மூலம், உத்தரகண்ட் மாநிலத்தில் 30 லட்சம் மக்கள் பயனடைவர். இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன் மாதிரி திட்டமாக இருக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும், மந்திரியாக வேண்டும் மற்றும் முதல்வராக வேண்டும் என்று மட்டும் நினைத்தால் போதாது. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உணவு, உடை மற்றும் இருப்பிட வசதியை செய்து கொடுப்பது என்ற லட்சியத்தையும் கொண்டிருக்க வேண்டும். தற்போது துவக்கி வைத்தது போன்ற திட்டங்கள், குளறுபடிகள் நடைபெறாத திட்டங்களாக இருக்க வேண்டும். நலிந்த பிரிவினருக்காக துவக்கப்படும் இதுபோன்ற திட்டங்களில் ஊழலுக்கே இடமிருக்கக் கூடாது.
மேலும், ஒளிவுமறைவற்ற தன்மையும் நிலவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் குடோன்களில் அழிந்து போகின்றன என, நம் விவசாய அமைச்சர் கூறுகிறார். இப்படி உணவு தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அவற்றை தேவையானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், திட்ட கமிஷனின் ஆய்வறிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. நம் நாட்டில் வாழும் மக்களில் 50 சதவீதம் பேர், நாள் ஒன்றுக்கு 90 ரூபாய் அளவில் குறைவான வருவாயே பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பணவீக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
0 comments :
Post a Comment