background img

புதிய வரவு

தி.மு.க.,வுடன் கூட்டணி:காங் - கம்யூ., வாக்குவாதம்


சென்னை:கூட்டணி விவகாரம் குறித்து, கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கட்சியினரிடையே, கடும் வாக்குவாதம் நடந்தது.இடைக்கால பட்ஜெட் மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:

சிவபுண்ணியம் - இந்திய கம்யூனிஸ்ட்: வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, தமிழக அரசு, 1,832 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டது. பல மாதங்களாகியும், மத்திய அரசு, நிவாரண நிதியை கொடுக்கவில்லை. அரசியல் காரணமா? தேர்தல் காரணமா? அல்லது சீட் பேரம் பிரச்னையா?
பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ்: என்றுமே, போகாத ஊருக்கு வழி சொல்லி பழக்கப்பட்டவர் சிவபுண்ணியம். மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது. தற்போது, வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைத்தது. இக்குழு தன் அறிக்கையை கொடுத்துள்ளது. அதை ஆய்வு செய்து, மத்திய அரசு முடிவெடுக்கும். இதில் சிவபுண்ணியத்துக்கு என்ன வேலை. நிச்சயம், மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி கொடுக்கும்.

சிவபுண்ணியம்: அடுத்த வெள்ளம் வந்திடும் போல உள்ளது. கடந்த காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, மத்திய அரசு, ஓடிவந்து கொடுத்தது. தற்போது, வெள்ள நிவாரண நிதியை கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான். அவர், நிதி வழங்க மறுக்கிறார்.

பீட்டர் அல்போன்ஸ்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை வரும் போதெல்லாம் முதல்வரை சந்திக்கிறார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து விஷயங்கள் குறித்தும் இருவரும் கருத்து பரிமாறிக் கொள்கின்றனர்.மற்ற மாநிலங்களுக்கு கொடுத்ததை விட, தமிழகத்துக்கு அதிக உதவியை மத்திய அரசு செய்துள்ளது. புள்ளி விவரங்களில் இது தெரியவரும். தமிழகத்துக்கு இதுவரை ஒன்றரை லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் வழங்கும்.மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் சிண்டு முடியும் வேலையில், சிவபுண்ணியம் ஈடுபட வேண்டாம்.
சிவபுண்ணியம்: மகாராஷ்டிராவில், சமீபத்தில் வெள்ளம் வந்த போது, மத்திய அரசு, 400 கோடி ரூபாய் கொடுத்தது. பீகாருக்கு, 2,000 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், தமிழகத்துக்கு ஒரு பைசா கூட தரவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் ஆள் சேர்க்கவில்லை எனக் கூறி வெளியே உண்ணாவிரதம் இருக்கும் மோசமான நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்: எங்களுக்குள் கூட்டணி என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால், நீங்கள் பெட்டி படுக்கைகளோடு பஸ் நிலையத்தில் காத்திருக்கிறீர்கள். எதில் ஏறுவது என்று தெரியாமல் உள்ளீர்கள்.

சிவபுண்ணியம்: நாங்கள் பெட்டி படுக்கையோடு இல்லை. தேசிய அளவிலான கொள்கைப்படி கூட்டணி வைக்கிறோம். அதாவது, உங்களோடு (காங்கிரஸ்) கூட்டணி வைப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன் உண்ணாவிரதம் இருப்பது தான் உங்கள் கட்சி.காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணம். அந்த கட்சியோடு தி.மு.க., உறவு கொண்டுள்ளது. இலங்கை பிரச்னை, மீனவர் பிரச்னை போன்ற பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் தான் காரணம். அக்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால், தி.மு.க.,வால் வலுவாக குரல் கொடுக்க முடியவில்லை.
பீட்டர் அல்போன்ஸ்: அடிமைத்தனத்தை ஒழித்து சுதந்திர இந்தியாவை உருவாக்கியது காங்கிரசின் குற்றமா? சுதந்திர இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து தேர்தல் நடத்தி வருவது குற்றமா? ஐந்தாண்டு திட்டத்தை கொண்டு வந்தது குற்றமா? உங்களை இன்னும் இந்த நாட்டில் உலவ விட்டிருப்பது தான் காங்கிரஸ் செய்த ஒரே குற்றம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts