சென்னை:""விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, வரும் தேர்தலில் தி.மு.க.,வின் கணக்கை தீர்த்து, அ.தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக உள்ளனர்,'' என்று சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசினார். சட்டசபையில், நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், சி.வி.சண்முகம் பேசும்போது நடந்த விவாதம்:சண்முகம்: தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடம் வகிப்பதாக கூறுகிறீர்கள். ஊழலில், கர்நாடகாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றும் கொடுமை, தமிழகத்தில் அதிகளவில் நடக்கிறது. அதேபோல், வேலைக்குச் செல்லும் இடங்களில் அதிகளவில் சிறுவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களும் இங்கு தான் நடக்கின்றன. குடும்ப ஆட்சியிலும், உங்களுக்குத் தான் முதலிடம்.
(இவ்வாறு கூறியதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.)
அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் இப்படி பேசினால், நாங்களும் பேச வேண்டியிருக்கும்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: அ.தி.மு.க., உறுப்பினர், ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது.
சண்முகம்: ஆதாரம் தானே. இதோ சொல்கிறேன். தந்தை முதல்வர்; ஒரு மகன் துணை முதல்வர்; மற்றொரு மகன் மத்திய அமைச்சர்.
(இப்படி கூறியதும், அமைச்சர்களும், தி.மு.க., உறுப்பினர்களும் ஆவேசம் அடைந்து, கடும் கூச்சலிட்டனர். இதனால், சபையில் திடீர் அமளி ஏற்பட்டது.)
அமைச்சர் பொன்முடி: குடும்ப ஆட்சியைப் பற்றி, சண்முகம் பேசக்கூடாது. ஏனெனில், அவரது தந்தை எம்.பி.,யாக இருந்தவர். அவருக்கு அடுத்து தான், நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள். தந்தை இல்லாமல், நீங்கள் அரசியலுக்கு வரவில்லை. எனவே, குடும்ப ஆட்சியைப் பற்றி பேசும் தகுதி உங்களுக்கு கிடையாது.
அமைச்சர் துரைமுருகன்: எங்கள் தலைவருக்கு குடும்பம் இருக்கிறது. அவர், நாடோடி கிடையாது. குடும்பம் இருப்பதால், பிள்ளைகளும் இருக்கின்றனர்.
சண்முகம்: "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற கோஷத்தை, உங்கள் சவு கரியத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொள்கிறீர்கள். மத்திய அரசுடன் உரசல் ஏற்பட்டால், உடனே இந்த கோஷத்தை பாடுகிறீர்கள். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் விவகாரத் தில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதற்குக் கூட, உங்களுக்கு தைரியம் இல்லை. பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு தடுப்பணை கட்டுகிறது. அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.
கல்வியை, மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என, பட்ஜெட்டில் கூறுகிறீர்கள். 12 ஆண்டுகளாக மத்திய அரசுடன் அங்கம் வகிக்கிறீர்கள். கல்வியை ஏன் மாநில பட்டியலில் கொண்டுவர முடியவில்லை? மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என, மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எடுத்த இந்த முடிவை, நீங்கள் தட்டிக் கேட்கவில்லை. அந்த சட்டத்தை திரும்பப்பெற, வலியுறுத்தவில்லை.
அமைச்சர் பொன்முடி: இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் கபில் சிபல் உறுதி அளித்துள்ளார்.
சண்முகம்: விலைவாசி உயர்வால், தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலைகள், 17.5 சதவீதம் உயர்ந்துள்ளன. காய்கறிகளின் விலைகள் 300 சதவீதம் கூடிவிட்டன. பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம். அதை தடை செய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
உணவுத்துறை அமைச்சர் வேலு: விலைவாசி உயர்வு, எல்லா மாநிலங்களிலும் உள்ளன. அதை சமாளிப்பதற்குத் தான், 4,000 கோடி ரூபாய் மானியத்தில், சிறப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த விலைக்கு மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சண்முகம்: விலைவாசி உயர்வால், பன்னாட்டு நிறுவனங்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக் கின்றன. விலைவாசி உயர்வால், தரமில்லாத உணவுப் பொருட்களை மக்கள் வாங்குகின்றனர். பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் வேலு: மத்திய அரசுக்கு, முதல்வர் எழுதிய கடிதம் காரணமாக, ஆன்-லைன் வர்த்த கத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.
சண்முகம்: கணக்கு என்றாலே, உங்களுக்கு பிடிக்காது. அன்று எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதற்காக, அவரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தீர்கள். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, வரும் தேர்தலில் உங்களது கணக்கை தீர்த்து, அ.தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 comments :
Post a Comment