background img

புதிய வரவு

அரசு கேபிள் "டிவி' என்ன கதி ஆச்சு?

சென்னை:""அரசு கேபிள் "டிவி' கழகத்தின் நிலை என்ன, அதன் ஊழியர்களின் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா?'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியது. பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
|ராமசாமி - காங்கிரஸ்: மீனவர்களிடம் எல்லைப் பிரச்னை உள்ளது. இதற்காக கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை பொருத்த வேண்டுமென 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். இன்றுவரை நடக்கவில்லை. ஜல்லிக்கட்டு, கோர்ட் உத்தரவுப்படி சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் நடத்த மறுக்கப்படுகிறது. பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதை எந்தளவு தளர்த்தலாம் என்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிவகங்கையில் 3,000 பேருக்கு பட்டா வழங்கி அரசு அங்கீகரித்து, அனைத்து வசதிகளையும் அங்கு செய்து கொடுத்திருந்தது. தற்போது, அந்த 300 ஏக்கர் நிலத்திலும் பத்திரப்பதிவு கூடாது என்று கூறுவது சரியாக இருக்குமா?
|அமைச்சர் சுரேஷ் ராஜன்: அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால், பட்டா பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமசாமி: யாரோ தவறு செய்திருக்கலாம். அந்த நிலம் அவர்களிடம் இல்லை. இரண்டு, மூன்று கைகள் மாறி தற்போது அதை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பொதுப்பணித் துறை மூலம் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. ஆனால், டெண்டர் எடுக்க ஆளில்லை. காரணம், கட்டட மதிப்பீடுகள் மிக குறைவாக இருப்பது தான்.
வேல்முருகன் - பா.ம.க: இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, பரீட்சார்த்த முறையில் ஆயுதங்களை வழங்க வேண்டும்.
நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களது குடியிருப்புகளுக்கு மின்சாரம் மறுக்கப்படுகிறது. முன்னறிவிப்பின்றி அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேசி நிர்வாகம் முடிவெடுப்பதில்லை.சேலம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும். "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும். மெரீனா கடலில் கடந்த ஆண்டு 44 பேரும், இந்த ஆண்டு இதுவரை 25 பேரும் பலியாகி உள்ளனர். இதை தடுக்க, கடலில் 10 முதல் 15 அடி வரை வலை அல்லது சுவர் ஏற்படுத்த வேண்டும்.தொலைக்காட்சிகளில் வக்கிரமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைக்கின்றனர். ஆபாச உடலசைவுகளை செய்கின்றனர். சமூக கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெரிய நட்சத்திர ஓட்டல்களில், "டிஸ்கோதே, பப்' போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
பாலபாரதி: தற்போது மக்கள் ஏழ்மையுடனும், வறுமையுடனும் தான் கூட்டணி வைத்துள்ளனர். 20 ரூபாய்க்கு சாப்பாடு விற்கப்படுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், இலையில் உப்பு, ஊறுகாய் மட்டும் தான் 20 ரூபாய்க்கு வைக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் சரியாக சம்பளம் வழங்குவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5,000 ரூபாய் தான் சம்பளம் பெறுகின்றனர். கால்நடை துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்களுக்கு 7,000 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்து, 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.இங்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சட்டசபையில் உள்ள சிப்பந்திகளுக்கு என்ன சம்பளம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 80 சதவீத மக்கள் இந்த நிலையில் தான் உள்ளனர். தொழிலாளர்களின் உழைப்பு, மதிப்பு, கூலி உயரவில்லை. எனவே, இந்த ஆட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்: மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தையும், கடைநிலை ஊழியர்களின் சம்பளத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சம்பள வித்தியாசத்துக்கு அனைத்து கட்சிகளுமே விடை தேடிக் கொண்டுள்ளன. சம்பள இடைவெளியை குறைக்க வழி தேட வேண்டும். கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் தனி நபர் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இன்னும் அங்கு கைவண்டி இழுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1972லேயே கைவண்டி நிறுத்தப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு மத்திய அரசே பொறுப்பு என்பது தவறு.
பாலபாரதி: எப்போது கேட்டாலும் திசை திருப்பப் பார்க்கிறார். நாட்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ராகுல் அவர்களது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறுகிறார். இரண்டு ஏக்கர் நில திட்டத்தில், ராமநாதபுரத்தில் பட்டா பெற்றவர்கள், தற்போது நிலத்தை காணவில்லை என்று கூறுகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: ராமநாதபுரத்தில் 200 பேருக்கு 200 ஏக்கர் நிலம் அளந்து பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை அந்த இடத்தில் விவசாயம் செய்யவில்லை. தற்போது அந்த நிலத்தை விற்பதற்காக கேட்கின்றனர்.
பாலபாரதி: கலர் "டிவி' வழங்குகிறீர்கள். தமிழக அரசின் கேபிள் "டிவி' கார்ப்பரேஷனின் நிலை என்ன, அதன் ஊழியர்கள் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா? மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருந்தாலே லட்சம் கோடி கடன் பெற்றிருக்கத் தேவையில்லை.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts