எகிப்தில் நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை நீண்ட நாள் தொடர அனுமதிக்க முடியாது என அந்நாட்டு துணை அதிபர் ஒமர் சுலைமான் எச்சரித்திருக்கிறார்.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி கடந்த 16 நாள்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தலைநகர் கெய்ரோவின் முக்கியப் பகுதியான தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் இன்னமும் தங்கியிருக்கின்றனர். முபாரக் பதவியிலிருந்து விலகும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் எகிப்தில் அரசியல் நெருக்கடி குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுடன் துணை அதிபர் சுலைமான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "நாட்டில் மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காகப் போராட்டக்காரர்களுடன் ஆலோசனை நடத்த விரும்புகிறோம்' என்று கூறினார்.
எகிப்தில் அமைதியைக் கொண்டுவருவதற்காக காவல்துறையையும் ஆயுதங்களையும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு யாரும் ஒத்துழைக்கவில்லை என்றால், ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கக்கூடும். ஆனால் அப்படியொன்று நடந்தால் மக்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு விவகாரம் போவதற்கு நாங்கள் விரும்பவில்லை என்று சுலைமான் பேசினார்.
ஆட்சிக் கவிழ்ப்பு என்றால் ராணுவத்தின் துணையுடனான ஆட்சிக் கவிழ்ப்பா என்று பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்த சுலைமான், "நான் அப்படிக் குறிப்பிடவில்லை. ஆளத் தயாராகாத ஒரு கூட்டத்திடம் ஆட்சிப் பொறுப்பு செல்லக்கூடும் என்று எச்சசரித்தேன்' என்றார்.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: இதனிடையே போராட்டத்தின் மையப் பகுதியான தஹ்ரீர் சதுக்கத்துக்குள் செல்ல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், போராட்டத்தின் போக்கு பற்றி எழுத முடியவில்லை என்று சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குறை கூறியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமைவரை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அனைவரும் போராட்டக்காரர்களுடன் கலந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று செய்தி சேகரித்து வந்தனர். தற்போது இதைத் தடுப்பதற்காக, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரும் எகிப்து அரசின் அங்கீகார அட்டை பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலும் சில செய்தியாளர்கள் எந்த அங்கீகார அட்டையையும் பெறாமல், தஹ்ரீர் சதுக்கத்துக்குள் நுழைந்து செய்தி சேகரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே பல பத்திரிகையாளர்கள் கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், கைது செய்யப்பட்டுச் சிறைகளிலும் இருக்கின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் மீது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது செய்தி சேகரிப்பதைத் தடுக்கும் முயற்சியே என்று பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு திரும்புவது எளிதானதல்ல: அமெரிக்கா அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் எகிப்தில் ஜனநாயகம் மலர்வது அவ்வளவு எளிதானதல்ல என்று அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் புதன்கிழமை பேசிய வெள்ளைமாளிகைச் செய்திச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், "யார் எகிப்தை ஆள வேண்டும் என்று முடிவு செய்ய நம்மால் முடியாது. போராட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளை அழைத்து, அனைத்துத் தரப்பினரையும் கொண்ட பேச்சுக்களை நடத்தி பிரச்னையைத் தீர்க்க எகிப்து அரசு முயற்சிக்க வேண்டும்' என்றார்.
0 comments :
Post a Comment