background img

புதிய வரவு

இறைவனது வேலையைச் செய்ய இங்கு வாருங்கள் - அன்னை

யாராவது என்னிடம் வந்து, "என்னுடைய யோக சாதனைக்காக நான் ஆசிரமத்திற்கு வர விரும்புகிறேன்" என்று சொல்லும் போதெல்லாம், "வேண்டாம் வேண்டாம், அதற்காகவென்றால் இங்கு வரவேண்டாம். மற்றெங்கேயும்விட இங்கு கஷ்டமாக இருக்கும்" என்று சொல்லிவிடுகிறேன்.

ஆனால், யாராவது, "நான் வேலை செய்ய வருகிறேன், என்னால் எந்த வகையிலாவது உபயோகமாக இருக்கக் கூடுமானால் அதற்காக வருகிறேன்" என்று சொன்னால் அப்போது சரி என்று சொல்கிறேன். ஆனால் யாராவது வந்து, "வெளியே எனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன, அந்தக் கஷ்டங்களை என்னால் வெல்ல முடியவில்லை, இங்கே வந்தால் அது உதவியாக இருக்கும்" என்று சொன்னால், "வேண்டாம் வேண்டாம், இங்கே மிக அதிகக் கஷ்டமாக இருக்கும், உன்னுடைய கஷ்டங்கள் மிகவும் அதிகமாகும்" என்று சொல்லிவிடுகிறேன். அதுதான் உண்மை நிலைமை. ஏனென்றால், இங்குள்ள கஷ்டங்கள் தனிப்பட்ட கஷ்டங்களல்ல, அவை கூட்டுக் கஷ்டங்கள்.

ஆகவே, உன்னுடைய சொந்தக் கஷ்டங்களோடு வெளியிலிருந்து வரும் உராய்தல்கள், தொடர்புகள், எதிர்வினைகள் எல்லாம் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சோதனையாக வருகின்றன. எது உன்னிடமுள்ள பலவீனமோ, எது உனக்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கின்றதோ, அதில்தான் அடி விழும். எந்த வார்த்தையை நீ கேட்கக்கூடாது என்றிருந்தாயோ அந்த வார்த்தையைத்தான் யாராவது சொல்வார்கள்.

எந்தச் செயல் உனக்கு அதிர்ச்சி தருமோ அதைத்தான் யாராவது செயல்வார்கள். எந்தச் சூழ்நிலை எந்த இயக்கம், எந்த நிகழ்ச்சி அல்லது வேறு ஏதாவது நீ வேண்டாம் என்றிருந்தாயோ அதுதான் உன்முன்வந்து நிற்கும், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், நீ யோகம் செய்வது, உனக்காக மட்டுமல்ல, நீ எல்லோருக்காகவும் யோகம் செய்கிறாய் - செய்ய வேண்டுமென்று நிநைக்காமலே, தன்னியக்கமாகவே.

ஆகவே, யாராவது என்னிடம் வந்து, சாந்தி பெறுவதற்காக, அமைதி கிடைப்பதற்காக, ஓய்விற்காக, என்னுடைய யோக சாதனைக்காக நான் இங்கே வர விரும்புகிறேன் என்று சொன்னால், வேண்டாம் வேண்டாம் வேண்டாம், வேறு எங்கேயாவது போய்விடுங்கள், நீங்கள் வேறு எங்கேயிருந்தாலும் இங்கே இருப்பதைவிட அதிக அமைதியோடிருப்பீர்கள் என்று சொல்லிவிடுகிறேன்.

ஆனால், யாராவது வந்து, "இறைவனது திருப்பணிக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் தரும் எந்த வேலையையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்" என்று சொல்வார்களானால், "நல்லது, உன்னிடம் நல்லெண்ணம், நீடித்து உழைக்கும் திறன், ஏதோ சிறிது திறமை இருந்தால் சரிதான். ஆனால் உனது அக வளர்ச்சிக்கு வேண்டிய தனிமை உனக்குத் தேவை என்றால் வேறு எங்கேயாவது, எங்கேயானாலும் சரிதான், போ, இங்கே வராதே" என்றுதான் சொல்கிறேன்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts