background img

புதிய வரவு

மகரஜோதி விவகாரம்... 4 வாரங்களுக்குள் பதில் தர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

4 வாரங்களுக்குள் பதில்..

நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:


இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts