புதுடில்லி:தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா மீது கூறிய குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவதாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங். இவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் சோனியா மீது குற்றம் சாட்டி, 2006ம் ஆண்டு மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அமர் சிங் சார்பில் சமீபத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காங்கிரஸ் மற்றும் சோனியா மீது கூறிய குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளரும், சீனியர் வக்கீலுமான அபிஷேக் சிங்வி மூலமாக அமர் சிங் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமர் சிங்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக முதலில் தாக்கல் செய்த மனுவில், காங்கிரஸ் கட்சி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அமர் சிங் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக தகவலை தெரிவித்துள்ளார். இதிலிருந்தே அவரின் குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது தெரிய வருகிறது. இது போன்ற மனுக்களை கோர்ட்டுகள் ஏன் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். கறை படிந்த கரங்களைக் கொண்டவர்களின் மனுக்களை ஏன் விசாரிக்க வேண்டும்.அமர் சிங் முதலில் தாக்கல் செய்த மனுவை கோர்ட் விசாரிக்கத் துவங்கி விட்டது. அதன்பின், பல ஆண்டுகள் மற்றும் பல மணி நேரங்கள் கடந்த பின், இப்போது அமர் சிங் மாறுபட்ட தகவலைச் சொல்கிறார். அவரின் இந்தச் செயல் சரியானதல்ல.தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக 2006ல் மனு தாக்கல் செய்த அமர் சிங், "எனது தனிப்பட்ட அறிவுக்கு எட்டியதை கணக்கில் கொண்டு பார்த்தால், தொலைபேசி ஒட்டுக் கேட்பின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட எனது அரசியல் எதிரிகள் உள்ளனர்' என, கூறியுள்ளார். ஒருவரின் தனிப்பட்ட அறிவிற்கு முதலில் சரியென தோன்றியது, பின்னர் எப்படி தப்பாகத் தோன்றும். உங்களின் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் கோர்ட் தான் பகடைக் காயாகிறது; அது தான் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
0 comments :
Post a Comment