background img

புதிய வரவு

விமான போக்குவரத்து துறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது : பிரதமர் மன்மோகன் சிங் பெருமிதம்

திருவனந்தபுரம் : "இந்தியாவில் விமான போக்குவரத்து துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இந்த துறையானது 5 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும். இதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவர்' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் 289 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தின் துவக்க விழா நடந்தது.

இதை துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டுமே முன்னர் பயனளித்தது. தற்போது வர்த்தகம், தொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சி பயன்படுகிறது.குறைந்த கட்டணத்திலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, ரயிலில் மட்டும் பயணித்தவர்கள் எல்லாம் தற்போது விமானங்களிலும் பயணிக்க துவங்கியுள்ளனர். விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்தியாவில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்படுகின்றன.

மும்பை, டில்லி விமான நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. ஐதராபாத் மற்றும் பெங்களூரில் இரண்டு பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியை ஒப்பிடும் போது, இன்னும் அதிகமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இதற்காக, வரும் ஆண்டுகளில் இத்துறையானது 5 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும். அத்துடன் லட்சக்கணக்கானவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவர்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

இந்த விழாவில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி, "ஏர் இந்தியாவின் பட்ஜெட் ஏர்லைன்சான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்தின் தலைமையகம், விரைவில் கொச்சிக்கு மாற்றப்படும்' என்றார்.

விழாவில் கலந்து கொண்ட கேரள முதல்வர் அச்சுதானந்தன், "வல்லார்படம் கப்பல் போக்குவரத்து முனையம் துவக்க விழா, தற்போது நடக்கும் விமான நிலைய விழா உள்ளிட்ட மத்திய அரசின் விழாக்களில், மாநில அரசுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.இத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, இந்த விவகாரத்தை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை' என்றார்.

பிரதமர் முன்னிலையில், அச்சுதானந்தன் இவ்வாறு பேசியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பிரமோஸ் ஏவுகணை தயாராகும் மையத்துக்கு சென்று, ஆய்வு செய்தார். ஏவுகணையின் பல்வேறு பாகங்கள் எப்படி பொருத்தப்படுகின்றன என்பது குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ராணுவ அமைச்சர் அந்தோணி உடனிருந்தார்.

நேர்மையாக இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : திருவனந்தரபுத்தில் மலையாள தினசரியான "கேரள கவ்முதி'யின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "பத்திரிகையாளர்கள், தங்கள் தொழிலில் நேர்மையாக நடந்து கொண்டால், சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சமூகத்தை கட்டமைப்பதில் பத்திரிகையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. துல்லியமான செயல்பாடும், நேர்மையான அணுகுமுறையும் ஒரு நல்ல பத்திரிகையாளருக்கான அடையாளங்கள்' என்றார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts