background img

புதிய வரவு

அள்ளிக் கொடுக்கிற மக்களுக்கு, கிள்ளிக் கொடுப்பது தவறில்லை-ராமதாஸ்

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமானது தான் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், மக்களுக்கு வினியோகிக்கும் பாலின் விலையை அரசு உயர்த்தக் கூடாது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையும், போராட்டமும் மிகவும் நியாயமானதுதான். பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளின் வியர்வைதான் பாலாக கறக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

அரசு புறம்போக்கு நிலத்திலும், மற்றவர்கள் நிலத்திலும் தண்ணீர் எடுத்து லிட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்து சிலர் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில், நாள் முழுவதும் உழைத்து வியர்வை சிந்தி பால் கறந்து தருகிற விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பது நியாயமானதே.

ஒருவாரக் காலமாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் தீவிரமானால் மாநிலம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டு, பால் நுகர்வோர்களான பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள். இந்தப் பாதிப்பு மாநிலத்தில் ஒவ்வொவரு குடும்பத்திற்கும் ஏற்படும்.

இத்தகைய ஆபத்தான நிலையைத் தவிர்க்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்கள் கோரியபடியே, பசும்பாலுக்கு லிட்டருக்கு 22 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 33 ரூபாயும் விலை நிர்ணயித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

கால்நடை தீவணத்தின் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பாலை எடுத்துச் செல்லும் வாகனச் செலவு ஆகியவை உயர்ந்துகொண்டே வரும் நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகும்.

மேலும், பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இரவு-பகலாக உழைத்து வருகின்றனர். அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தடையாக இருக்கும்பட்சத்தில், அந்தத் தடையை தகர்ப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் இந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், பால் விநியோக விலையை உயர்த்தும் முடிவுக்கு அரசு அவசரப்பட்டு வந்துவிடக்கூடாது. கொள்முதல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

மதுவினால் மக்கள் இந்த அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். அப்படி அள்ளிக் கொடுக்கிற மக்களுக்கு, கிள்ளிக் கொடுக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால், ஏற்படும் கூடுதல் செலவை அரசே மானியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts