background img

புதிய வரவு

ராசாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு-சந்தோலியா-பெகுரியாவுக்கு 14 நாள் சிறை

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களாக சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராசா மற்றும் சந்தோலியா, பெகுரியாவின் ஆகியாரை கடந்த 2ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர்களை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த 5 நாட்களாக இந்த மூவரம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த 5 நாள் விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா அடைந்த லாபம், பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

முன்னதாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது என்று கூறியுள்ளது.

இந் நிலையில் மூவரின் 5 நாள் காவல் இன்று முடிவடைவதையடுத்து பிற்பகலில் ராசா உள்ளிட்ட மூவரையும் சிபிஐ, நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜர்படுத்தியது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராசாவிடம் விசாரணை முடியடையவில்லை, அவர் .போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை, மேலும் கிடைத்துள்ள சில ஆவணங்களை ராசாவிடம் காட்டி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அவரை மேலும் 4 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு கோரினார். ஆனால், அவரை மேலும் 2 நாள் மட்டும் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார்.

அதே நேரத்தில் சந்தோலியா, பெகுரியாவிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ கூறியதால் அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கும், சந்தோலியா, பெகுரியா ஆகியோர் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

2 நாள் விசாரணை முடிவடைந்த பின் 10ம் தேதி ராசாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நிரா ராடியா கைது?:

இந் நிலையில் அடுத்தக் கட்டமாக நிரா ராடியாவை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts