ஏரல்: ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கின்றார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ‘தாமிரபரணியை பாதுகாப்போம்’ என்பதை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை பார்த்தாலே அது அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. அது மட்டும் அல்ல பட்ஜெட்டில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கந்து வட்டி, மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், அரிசி கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் என அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து அதிமுக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து மாநிலக் குழுவில் இறுதி முடிவு செய்யப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் கருணாநிதி முயற்சி செய்கின்றார். ராசா முதலில் தலித் என்றார். அடுத்து ஆரியர் - திராவிடர் குறித்து பேசினார். பின்பு ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை, இழப்பு தான் என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஆ. ராசா கைது செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
காமன்வெல்த் ஊழலில் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஆதர்ஷ் ஊழலில் மஹாராஸ்டிரா முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியும் ஊழலில் மூழ்கியுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment