
இரண்டு ஆலயங்களிலும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண் டபம், சிம்ம வாகனம் ஆகியவற்றோடு கருவறை விமானங்களும் உள்ளன. சின்ன மாரியம்மன் ஆலயம், பெயருக்கேற்றார்போல சற்று சிறியது. இரண்டு ஆலயங்களிலும் மாரியம்மன் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். கருவறை வாசலில் ஆளுயரத்துக்கு ஆண், பெண் காவல் தெய்வங்கள் கள்வர்கள், தீயவர்கள் அஞ்சும் வகையில் நிற்கிறார்கள். பெரிய மாரியம்மன் ஆலயத்து காவல் தெய்வங்களின் கரங்களில் சூலம் காணப்படுகிறது. சின்ன மாரியம்மன் ஆலயத்து காவல் தெய்வங்களின் கைகளில் அரிவாள் காணப்படுகிறது.
பெரிய மாரியம்மனுக்கு வைகாசி மாதம் பதினைந்து நாள் விழா நடைபெறுகிறது. சின்ன மாரியம்மனுக்கு மாசி மாதத்தில் பதினைந்து நாள் விழா நடைபெறுகிறது. இதில் மாவிளக்கும், தாலாட்டு உற்சவமும் குறிப்பிடத்தக்கவை. மாவிளக்கு அன்று அம்மனை அழைக்க குதிரையின் மீது ஏற்றி அணிவகுத்து செல்கிறார்கள். அருகிலுள்ள தெருவில் மாவிளக்கோடு காத்திருப்பவர்கள் அன்னையை வரவேற்கிறார்கள். வரவேற்புக்கு பிறகுதான் அன்னை புறப்படுகிறார். இதனால் இந்த வீதிக்கு மாவிளக்கு மாரியம்மன் கோயில் வீதி என்ற பெயர் வழங்குகிறது.
விழாவில் நடைபெறும் தாலாட்டு நிகழ்ச்சியில் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுப் பாடுகிறார்கள். பெரிய மாரியம்மன் கோயிலில் விநாயகர் தரிசனம் கிடைக்கிறது. பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் தென்னை மரங்களும் பூச்செடிகளும் காணப்படு கின்றன. ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரண்டு மாரியம்மன் கோயில்களிலும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
பௌர்ணமியன்று அபிஷேகம் அன்னதானம் நடைபெறும். பெரிய மாரியம்மனும், சின்ன மாரியம்மனும் இப்பகுதி மக்களின் சக்தி வாய்ந்த தெய்வங்களாகத் திகழ்கிறார்கள். இவர்களை வணங்கினால் தொற்று நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஈரோட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அந்தியூர் அமைந்துள்ளது.
0 comments :
Post a Comment