background img

புதிய வரவு

எஸ் - பாண்ட் டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு: ஆய்வு செய்ய உயர்மட்ட குழு நியமனம்


புதுடில்லி: "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், விரைவில் ஏவ இருக்கும், ஜி-சாட் -6 மற்றும் ஜி-சாட் 6ஏ செயற்கைக்கோள்களில் எஸ் - பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இடம்பெற உள்ளன. இது, தொலைத்தொடர்பு சேவையில், "4ஜி' ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கான அதிசக்தி வாய்ந்த அலைவரிசையை கொண்டவை. வர்த்தக பயன்பாட்டிற்கான, நடவடிக்கைகளை துவக்குவதற்காக உருவாக்கப்பட்டது ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம். இந் நிறுவனம், இரண்டு செயற்கைக்கோள்களில் தலா, பத்து எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை திவாஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, 2005ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தம் ஏற்பட்ட போது, "எஸ்-பாண்ட்' தொழில்நுட்பம் குறித்து அவ்வளவு போட்டியில்லை. தகவல் தொழில்நுட்பத்தில், அதிக மாறுதல்கள் ஏற்பட்ட பிறகு, "2ஜி', அதைத் தொடர்ந்து "3ஜி' பற்றி இப்போது தான் அதன் பயன்கள் தெரிந்துள்ளன. ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் ஒப்பந்தம் குறித்து கடந்த 2009ம் ஆண்டே பிரச்னை எழுந்து ஆய்வு செய்யப்பட்டது.

"எஸ்-பாண்ட் 'டிரான்ஸ்பாண்டர்களை பயன்பாட்டிற்கு விடுவதில் சர்வதேச அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முடிவு செய்ய வேண்டியிருப்பதால், திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய "இஸ்ரோ ' முடிவு செய்தது. இது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டியிருந்ததால், உடனடியாக தீர்வு காணப்படாமல் இருந்தது. இதற்கிடையில், மத்திய தணிக்கை அதிகாரி நடத்திய ஆய்விலும் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அது, பிரச்னையாகி மீடியாக்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. செயற்கைக்கோள்களே ஏவப்படாத நிலையில், இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதை மத்திய அரசு மறுத்தது. ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என, "இஸ்ரோ'வும் அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் மல்டிமீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை மறு ஆய்வு செய்ய, இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை, மத்திய அரசு நேற்று நியமித்தது.
திட்டக் கமிஷனின் உறுப்பினர் பி.கே.சதுர்வேதி தலைமையிலான குழுவில், விண்வெளித் துறையில் வல்லுனரும், விண்வெளி கமிஷனின் உறுப்பினருமான ரோத்தம் நரசிம்மாவும் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, திவாஸ் மல்டி மீடியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வர். ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி தொடர்பான நடைமுறைகள், விதிமுறைகள் உட்பட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வர். தங்கள் ஆய்வை ஒரு மாதத்திற்குள் முடித்து அறிக்கையை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கேபினட் அமைச்சரவை கூட்டத்தில், "எஸ்-பாண்ட்' விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து, விரிவாக அறிந்துகொள்ள விரும்புவதாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விண்வெளி ஆராய்ச்சிக் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், ஒப்பந்தம் குறித்த விவரங்களை உள்ளடக்கிய இரண்டு பக்க அறிக்கையை சமர்ப்பித்தார். இதில், திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி, கடந்தாண்டு ஜூலை மாதமே விண்வெளி கமிஷன் பரிந்துரைத்ததாக குறிப்பிட்டு இருந்தார். பின், கேபினட் கூட்டத்தில், ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைத்திருப்பதாக பிரதமர் அறிவிப்பு செய்தார்.
திவாஸ் விளக்கம்: இதற்கிடையில், திவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாங்கள், எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை தான் செய்து இருந்தோம். எங்களுக்கு ஒளிபரப்புக்கான அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் நிறைவு செய்து இருந்தோம். எங்களுடன் இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் அரசு விதிகளை முழுமையாக கடைபிடித்து இருந்தோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ., கேள்வி: "ஒப்பந்தம் செய்யப்பட்டது கடந்த 2005ம் ஆண்டு. அப்போது கேபினட் செயலராக இருந்தவர் பி.கே.சதுர்வேதி. ஒப்பந்தம் குறித்து அனைத்து விஷயங்களும் அவர் தெரிந்து இருக்கும். அவரை ஆய்வு செய்ய நியமித்தது சரியா' என, பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts