background img

புதிய வரவு

திமுக தேர்தல் அறிக்கை-கருணாநிதி வெளியிட்டார்

சென்னை: 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட்டது.

திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.

இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.
அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதியின் பேச்சு:

அவர் கூறுகையில், வாக்குறுதிகளிலேயே சிறந்த வாக்குறுதி, காப்பாற்றப்பட வேண்டிய வாக்குறுதி தேர்தல் வாக்குறுதி என்பதை அனைவரும் அறிவீர்கள். சில வாக்குறுதிகளை காற்றினிலே பறக்க விடப்பட்ட வாக்குறுதிகளாக இருப்பதை அறிவோம். அத்தகைய வாக்குறுதிகளாக திமுக வழங்குகம் வாக்குறுதிகள் ஆகி விடக் கூடாது என்பதற்காகவும், வழங்கி நிறைவேற்ற முடியாமல் ஆகி விடக் கூடாது என்பதற்காகவும், அவ்வாறு ஆகாது என்பற்காகவும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று திட்டமிட்டுக் கூறுவதை திமுக கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, கடைப்பிடித்து வருகிற வாக்குறுதிகளைக் கொண்டுள்ளது.

கடந்த தேர்தல்களின்போது சொல்லி விட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூற முடியாத அளவு காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்ற இவை அனைத்தும் ஆட்சியாளர்களாகிய எங்களின் தாமதம், அக்கறையில்லாமல் நிறைவேற்றாமல் இருப்பவை என்று கருதத் தேவையில்லை.

நீதிமன்றங்களில் போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் இவை நிறைவேற்றப்படாமல் உள்ளன.

முட்டுக்கட்டைகள் போடப்பட்டு ஓடாமல் இருக்கும் தேர், அவை அகற்றப்பட்டால் மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து ஆடி நகர முடிகிறது அல்லவா, அது போலத்தான் தவிர்க்க முடியாததும், நீதிமன்ற தலையீடுகளாலும், காவிரியானாலும், பெரியார் பிரச்சினையானாலும், சேது சமுத்திரத் திட்டமாக இருந்தாலும், முட்டுகட்டைகளால், விரைந்து நிறைவற்ற முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் நாளை மறுநாள் அல்லது என்றோ ஒரு நாள் எப்படியோ நிறைவேற்றிட முடியும் என்ற நம்பிக்கையோடு, திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு மனமார்ந்த வரவேற்பையும், வாழ்த்துக்களையும் எதிர்பார்த்து ஏழை எளியோர் சாமானிய மக்கள், பட்டணங்களிலே வசிப்போர், பட்டிக்காட்டிலே வசிப்போர் என அனைத்துத் தரப்பினரும் எங்களை தொடர்ந்து பணியாற்றிட அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளோடு தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன்.

- ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வுகள் எப்போதும் வேண்டாம் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

- நதி நீர் இணைப்பை தொடர்ந்து வலியுறுத்துவோம். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை தொடர்நது வலியுறுத்துவோம்.

- செம்மொழியாம் தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்

-உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களில் நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.

- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாடுபடுவோம்

- மத்திய தேர்வாணைய தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் எழுத நடவடிக்கை எடுப்போம்.

- ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தோறும் வேளாண் உற்பத்திச் சாதனங்கள் நியாயமான வாடகையில் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு.

- இலவச மின்சாரத் திட்டத்தை தென்னை வளர்ப்பு உள்ளிட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவோம்

- நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை மூலம் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

- படித்த இளைஞர்களுக்காக மாவட்டந்தோறும் சிறப்புத் திறன் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் 2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.

- வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து அவர்களின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்படும்

- டெல்டா மாவட்டங்களில் வைக்கோலைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காளாண் வளர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவோம்.

- சொட்டு நீர்ப்பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு தற்போது அளிக்கப்படும் 65 சதவீத மானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவீதமாக உயர்த்தப்படும்.

- சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.

- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.

- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல, மீன்பிடியின்போது பாதிப்புக்குள்ளாகும் ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தி மீனவர்நலனைப் பாதுகாப்போம்.

- விசைப் படகுகளுக்கு மாதந்தோறம் வழங்கப்படும் 1500 லிட்டர் டீசல் மானியம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 300 லிட்டர் மானியம் என்பதை முறையே, 2000 லிட்டர் டீசல், 500 லிட்டர் டீசலாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

- கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம்.

தொடர்ந்து அவர் உரையாற்றிக் கொண்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் மிக முக்கிய அம்சங்களை அவர் இறுதியில் அறிவிக்கவுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts