background img

புதிய வரவு

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டி

சென்னை, மார்ச் 17: சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சென்னைக்கு வெளியே போட்டியிடுகிறார். கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 119 வேட்பாளர்களின் பெயர்களை முதல்வர் கருணாநிதி சென்னையிலுள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அறிவித்தார்.

ஆர்க்காடு வீராசாமிக்கு வாய்ப்பில்லை: இந்தப் பட்டியலில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. உடல்நிலை இடம்தராத காரணத்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்தப் பட்டியலில் 58 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்களில் 11 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

தொகுதி மாறிய அமைச்சர்கள்: கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் தங்களது தொகுதிகளிலிருந்து மாறி வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

வழக்கமாக துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன் இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியிலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பிற அமைச்சர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்கள் இந்த முறை வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தா.மோ.அன்பரசன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோரும் இந்த முறை வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் தொகுதிகள் மாறியுள்ளன.
மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த 6 பேருக்கு வாய்ப்பு: மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.க.வில் இணைந்த 6 பேருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த பி.கே. சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோருக்கும், ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்த சி.கோவிந்தசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வாரிசுகள்: தி.மு.க.வின் மூத்தத் தலைவர்கள் சிலரின் வாரிசுகளுக்கு முதன்முறையாகப் போட்டியிட இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மறைந்த என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி மாதவரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருநெல்வேலி மாநகர மேயராக உள்ள ஏ.எல்.சுப்பிரமணியன் மகன் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக...: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் என்.ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள் 70 பேர், வழக்கறிஞர்கள் 26 பேர், முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர், டாக்டர்கள் 3 பேர், பொறியாளர்கள் 2 பேர் இடம்பெற்றுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts