background img

புதிய வரவு

சூரியனார் கோயில்

ஸ்தல வரலாறு:

கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருள்மிகு சிவசூரியபெருமான் திருக்கோயில் என்றும் அழைக்க்படுகிறது. சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கெனத் தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது. இந்த ஸ்ரீ சூரிய பகவானின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இரண்டு தலங்கள்:

புராண காலத்தில் இத்தலம் எருக்கங்காடாக இருந்தது. ஜனநடமாட்டம் காரணமாக பின்னர் காடுகள் அழிந்து, ஸ்ரீபிராணநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும் சூரியன் உள்பட நவநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதி சூரியனார்கோயில் என்றும் பெயர் பெற்று இரண்டு தலங்களாகப் பிரிந்தன.

சூரியன் நீராடிய தீர்த்தம்:

தொழுநோய் தோஷத்தைப் போக்கிக் கொள்ள நவ நாயகர்கள் தவம் செய்ய வந்தபோது இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் அவர்கள் நீராடித் தவம் புரிந்ததால், அத்தீர்த்தங்கள் நவ நாயகர்களின் பெயர் பெற்றன. அவற்றுள் ஒன்றான "சூரிய புஷ்கரணி", சூரியன் நீராடிய தீர்த்தம் என்று வரலாறு கூறுகிறது.

கோள் தீர்த்த விநாயகர்::

நவக்கிரக நாயகர்கள் இத்தலத்தில் தவம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களின் தோஷத்தை இவ்விநாயகர் தீர்த்ததால் இவருக்கு கோள்தீர்த்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்று. கோயில் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இந்தவிநாயகரின் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ சூரியபகவான்:

பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் ஸ்ரீசூரிய பகவான் காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறத்தில் உஷா தேவியும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவி என்னும் சாயா தேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

சூரியனின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டினாற்போல் நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகிய ஏழு கிரக நாயகர்களுக்கு தனித் தனிச் சிறு கோயில்கள் உள்ளன. இந்த சிறப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை.

குரு மண்டபம் :

சூரியனின் உக்கிரத்தைத் தணிக்க சூரியனை நோக்கியபடி கிழக்கு முகமாக மகா மண்டபத்தில் குரு காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே தென் மேற்கில் சனீஸ்வரனும், தெற்கில் புதனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும்,தென் கிழக்கில் அங்காரகனும் (செவ்வாய்), கிழக்கில் சந்திரனும், தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் ஏனைய எட்டு கிரக கோவில்கள் எழுந்தருளியுள்ளனர்.

வழிபடும் முறை :

ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் ராஜ கோபுரத்துக்கு வெளியே உள்ள சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கோபுர தரிசனம் செய்துவிட்டு, கோள்தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டும். அடுத்து ஸ்தபன மண்டபத்தை அடைந்து ஸ்ரீகாசி விசுவநாதர், ஸ்ரீவிசாலாட்சி அம்மையை வழிபட வேண்டும்.

பின் பிரதான ஸ்ரீ சூரிய பகவானைத் தரிசிக்க வேண்டும். சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்த பிறகு, திரும்பி நின்று குரு பகவானை வழிபட வேண்டும். அடுத்து கிழக்கு முகமாக சனீஸ்வரர் உள்பட கிரக நாயகர்களை வழிபட்டால் மிகவும் நல்லது. கொடி மரத்தை வீழ்ந்து வணங்கி, பின் அங்கிருந்து வடகிழக்கு தெற்குப் பிரகாரம் வழியாக ஒன்பது முறை வலம் வரவேண்டும்.

வலம் வந்து முடித்த பிறகு, கொடி மரத்தடியில் மீண்டும் வீழ்ந்து வணங்கிவிட்டு, ஒருபுறமாகச் சென்று உட்கார்ந்து நவக்கிரக நாயகர்களைத் நினைத்து வணங்கவேண்டும்.

தோஷ நிவர்த்தி::

இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக நாயகர்கள், ஆயுதம் - வாகனம் இல்லாமல் அமைதியும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குவது சிறப்பு. புத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம், சூரிய புத்தி, சூரிய திசை உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு வழிபாடுகள் :

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு அன்று இங்கு உள்ள அருள்மிகு சிவசூரியப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது நடைமுறையில் உள்ளது.

சூரியன் குணங்கள்::

சூரியன் (ஞாயிறு) சூரிய தசை - ஆறு ஆண்டுகள்
ஒவ்வொரு ராசியிலும் : ஒரு மாதம் தங்கும் காலம்
ராசி - சிம்மம்
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு வீடுகள் - கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
பகை வீடுகள் - ரிஷபம், மகரம், கும்பம்
உச்சம் - மேஷம்
நீச்சம் - துலாம்
அதி தேவதை - அக்னி
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - வெண் தாமரை, எருக்கு
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ராசிக் கற்கள் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
பலன் - கண் நலம், உடல் நலம், ஆயுள் விருத்தி, சகல காரியங்களும் கைகூடும்.

நடை திறக்கும் நேரம்:

கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை விசேஷ நாள். எனவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், ஞாயிறுதோறும் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சூரியன் சஞ்சரிப்பார். தனது சுழற்சியில் ஒருவருடைய ராசிக் கட்டத்தில் வந்து தங்கும் இடத்துக்கு ஏற்ப பலன்கள் இருக்கும். இவரது பிரவேசத்தைக் கொண்டே விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

உதாரணமாக மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தை மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறோம். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தமிழ் வருஷப் பிறப்பு; சித்திரை பிறக்கிறது. மேஷ ராசியில் சூரியன் உச்சம் என்பதால் கடும் வெப்பம். ஜன்ம ராசியில் இருக்கும் சமயம் ஜாதகருக்கு அலைச்சல் இருந்தாலும் புகழ், கௌரவம், செல்வாக்கு அதிகரிக்கும்.

மரியாதை ஏற்படும். நோய்கள் வந்து வந்து போகும். வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிலையில், 5 நாட்களுக்கு முன்பாகவே செல்லப் போகும் ராசிக்கு உரிய பலன்களை சூரியன் தர ஆரம்பித்து விடுவார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது கும்பகோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts