background img

புதிய வரவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டனம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது முஸ்லீம் லீக்.

இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வேட்பாளர்கள் விவரம் :

1) துறைமுகம் - அல்தாப் ஹுசைன்
2) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்
3) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது

வேட்பாளர்கள் பற்றிய விவரம்:

துறைமுகம் - அல்தாப் ஹுசைன்

திருப்பூர் அல்தாப் என்று அழைக்கப்படும் அல்தாப் ஹுசைன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியிருந்து வருகிறார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காலம் சென்ற பிரபலமான தலைவர் திருப்பூர் மைதீன் (முன்னாள் எம்.எல்.ஏ) புதல்வராவார்.

60 வயதாகும் அல்தாப், மிகச் சிறந்த பேச்சாளர். தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுபவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர். தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர். டன்லப் இந்திய கம்பெனியில் முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் இருந்தவர்.

வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்

வாணியம்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது பணியாற்றும் எச். அப்துல் பாசித் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வருகிறார். டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு வயது 46. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நீண்ட கால உறுப்பினர். மிகச் சிறந்த பேச்சாளர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.

தோல் காலணி உருவாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சிறந்த பொது நல ஊழியரான இவர் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்தவர்.

நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது

ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எம். முஹம்மது ஷேக் தாவூத், நாகூரில் வசித்து வருகிறார். டிப்ளமோ மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான இவருக்கு வயது 60.

மிகச் சிறந்த பொது நல ஊழியரான இவர் நாகூர் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும், கவுதியா சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்தாபனங்களின் சார்பில் ஆண், பெண் கல்வி நிலையங்கள், தர்மஸ்தானங்கள் நடைபெற்று வருகின்றன. நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளராகவும் உள்ள இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts