background img

புதிய வரவு

வாகன சோதனையில் பண மூடைகள்: கார்களில் சிக்கிய ரூ.92 லட்சம்; திண்டுக்கல்-உசிலம்பட்டியில் பரபரப்பு

வாகன சோதனையில் கார்களில் சிக்கிய ரூ.92 லட்சம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் போலீசார் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. எனவே சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை போட்டனர். காரில் ஆர்.எம்.காலனியை சேர்ந்த தென்னவன் (வயது31), சண்முகம் (50) ஆகியோர் இருந்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது ரூ.34 லட்சம் பணக்கட்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக தென்னவன் தெரிவித்தார். ஆனாலும் தேர்தல் நேரததில் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இருந்தும் ரூ.34 லட்சம் சிக்கியுள்ளதால் இந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் கொண்டு வரப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேர்தல் சிறப்பு ரோந்து படையினர் செக்கானூரணி அருகே மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த மாருதி காரை மடக்கி சோதனை நடத்தியதில் 2 மூடைகளில் பணக்கட்டுகள் இருந்தன. பணம் கொண்டு வந்த ஜெயக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஜெயக்குமார் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணி புரிவதாகவும், உசிலம் பட்டியில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ரூ.58 லட்சத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு படையினர் ரூ.58 லட்சத்தையும் ஜெயக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். ஒரே நாள் சோதனையில் திண்டுக்கல்- உசிலம்பட்டியில் ரூ.92 லட்சம் பணக் கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts