background img

புதிய வரவு

ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் துரதிருஷ்டவசமானது: பிரதமர் குமுறல்

புது தில்லி, மார்ச் 18: ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத்தால் இது குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'இந்தியா டுடே'-யின் 10-ம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
முத்திரைத்தாள் கட்டண விகிதம் அதிகமாக இருப்பதால்தான் சொத்துகளின் மதிப்பை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனாலேயே ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அது முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்பதுதான். இருப்பினும் நமது நாட்டில் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் மிகவும் குழப்பான விஷயம். இதை சரி செய்வது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும், இதற்கு அடுத்தபடியாக உற்பத்தித் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் உள்ளதாகவும் நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இக்கருத்தை தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்போது இத்தகைய கறுப்புப் பண புழக்கம் குறைந்து இத்துறைக்கு தூய்மையான ஒரு தோற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மை: சர்வதேச அளவில் அரசியலில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் இந்திய அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. அணுகுமுறையில் பல புதுமைகளும், நெகிழ்வுத் தன்மையும் சேர்ந்தால் அது மேலும் பொலிவுபெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு அதிகார பகிர்வு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு உரிய வகையில் மாறிக்கொள்ளும் சாதகமான சூழல் இந்தியாவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிதி நெருக்கடி நிலவியபோது அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவியது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நிர்வாக செயல்பாடுகளில் சில குறைகள் உள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார். அனைத்து நிலையிலும் நிர்வாகத் திறன் மேம்பட ஊழலை ஒழிப்பது மிகவும் அவசியம் என்றார்.
பழைய முறைகள் முற்றிலுமாக மாறி வருகின்றன, புதிய முறை என்ன என்பதை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தகைய புதிய முறையின் மூலம் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.
ஜனநாயக இந்தியா இப்போது தனது சகோதர நாடுகளான மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பதோடு அவை தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது என்றார். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சரிவுக்குப் பிறகு மிக முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. இதைப் போலவே அரசியல், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையைப் போன்று பல நாடுகளின் கூட்டமைப்பு இப்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார் பிரதமர்.
உள்நாட்டிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இப்போது அரசியலில் அதிகார பரவல் நிகழ்ந்து வருகிறது. சாதாரண மக்களிடமும் அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஜனநாயக மாற்றத்தை அர்த்தமுள்ளதாக்க அரசு முழு முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்கும் யோசனை வரவேற்கத்தக்கது என்று டாடா ஹவுசிங் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.
முத்திரைத்தாள் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மும்பையில் 4 சதவீதமாக உள்ள கட்டணம் கேரளத்தில் 13 சதவீதமாக உள்ளது. ஹரியாணாவில் 6 சதவீதமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 8 சதவீதமாகும், பிற மாநிலங்களில் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும் உள்ளது.
முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. அனாவசிய கட்டணம் காரணமாக குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசு மீது சுமத்தப்படுகிறது.
இப்போது முத்திரைத்தாள் கட்டணம் கட்டட மேம்பாட்டாளர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. வீடு வாங்குவோரிடமும் வசூலிக்கப்படுகிறது. முத்திரைத் தாள் கட்டணத்தை நாடு முழுவதும் 4 சதவீதமாக நிர்ணயித்தால், சொத்து மதிப்பை குறைத்து காட்டுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று பானர்ஜி குறிப்பிட்டார்.
மத்திய அரசு ஒரு நிதியத்தை ஏற்படுத்தி முத்திரைத்தாள் கட்டண குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்கிறது. இதை தில்லி, உத்தரப் பிரதேசம் பயன்படுத்திக் கொள்வதற்காக வரி குறைப்பு செய்துள்ளது. இதே முறையை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்று பர்சாவந்த் மேம்பாட்டு தலைவர் பிரதீப் ஜெயின் குறிப்பிட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts