background img

புதிய வரவு

60 சீட்களுடன் திருப்திபடுகிறது காங்.,: மம்தா கட்சியுடன் இன்று உடன்பாடு

கோல்கட்டா : "மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு விவகாரம் சுமுகமாக முடிவடையும் என நம்பிக்கையுள்ளது' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசும், மம்தாவின் திரிணமுல் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த குழுவினருடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன் பூஜாரி, மேற்கு வங்க மாநில காங்., தலைவர் மனஸ் புனியா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில மேலிட பொறுப்பாளரான ஷகீல் அகமது கூறியதாவது: தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இரு தரப்பிலும் தங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இன்று நடந்த பேச்சுவார்த்தையின் விவரங்கள், மம்தாவிடமும், பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவிக்கப்படும். இதன்பின், இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி, தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, திரிணமுல் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானது தான். இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "துவக்கத்தில் காங்கிரஸ் சார்பில் 100 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு 45 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க, மம்தா முன்வந்தார். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில், தனது கோரிக்கையை 75 தொகுதிகளாக காங்கிரஸ் குறைத்தது. தற்போது 60 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கு, மம்தா திட்டமிட்டுள்ளார்' என்றன.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு:மேற்கு வங்க ஆளும் கட்சியான இடதுசாரி கூட்டணி, தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 149 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அரசில் அமைச்சர்களாக உள்ள மனாப் முகர்ஜி, பார்த்தா தேய் உள்ளிட்ட எட்டு அமைச்சர்களுக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஜதாவ்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சில அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். சில அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts