background img

புதிய வரவு

அ.தி.மு.க.வுடன் உறவா? பிரிவா? வைகோ இன்று முடிவு

சென்னை, மார்ச் 18: சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடருவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து விவாதிக்க ம.தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 19) நடைபெறுகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுக்கு அ.தி.மு.க. தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தே.மு.தி.க. (41), மார்க்சிஸ்ட் கட்சி (12), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (10), சரத்குமாரின் ச.ம.க. (2), இவை தவிர சிறிய கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு என அ.தி.மு.க. தொகுதிகளை ஒதுக்கியது.
ஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்ட வைகோ, பிறகு 30, 25, 21 இறுதியாக 18 தொகுதிகள் வரை குறைத்துக்கொண்டார். இருப்பினும் ம.தி.மு.க.வுக்கு அதிகபட்சமாக 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்தது. இதுகுறித்த பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே அ.தி.மு.க. திடீரென தங்கள் கட்சியின் 160 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
2006-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்த வைகோவுக்கும் அவரது கட்சியினருக்கு மட்டுமல்லாமல் பல தரப்பினருக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியல் - கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ச.ம.க., புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளிடம் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் அவருடைய உருவ பொம்மையை எரித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
வேட்பாளர் பட்டியலை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வை கூட்டணிக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் ஜெயலலிதா தரப்பில் இருந்து வியாழக்கிழமை இரவு வரை எந்த பதிலும் இல்லை.
இதற்கிடையே தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி மூன்றாவது அணி அமைப்பது பற்றி கலந்து ஆலோசித்தனர்.
நிலைமையின் விபரீதத்தைத் தாமதமாகப் புரிந்துகொண்ட ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை மதுரையில் தான் தொடங்கவிருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பேச்சு நடத்தினார்.
இந்தச் சூழ்நிலையிலும் ம.தி.மு.க.வை மரியாதை நிமித்தமாகக் கூட அ.தி.மு.க.விலிருந்து யாரும் அழைத்துப் பேசவில்லை. இது வைகோவையும் ம.தி.மு.க.வினரையும் சோர்வுக்குள்ளாக்கியது. இருந்தபோதும் வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ம.தி.மு.க. தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தல் போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனால் சனிக்கிழமை நடைபெறும் ம.தி.மு.க.வின் உயர்நிலைக் குழுவில் கட்சியின் தன்மானத்தைக் காப்பாற்றும் வகையிலும் தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
குறிப்பாக, அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts