background img

புதிய வரவு

தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயார்

சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயாராகி விட்டன. நீண்ட இழுபறிக்கு பின் நேற்று தொகுதிகளை பிரிக்கும் சிக்கல் தீர்ந்ததால், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

அடுத்த மாதம் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, நாளை (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.

அதே நேரத்தில், அ.தி.மு.க., அணியில் முதலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டாலும், தே.மு.தி.க.,விற்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுப்பதில் இழுபறி நீடித்தது.
தே.மு.தி.க.,விற்கு முதலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு தொகுதிகள் கூட இடம் பெறவில்லை. இதனால், அந்த மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், விஜயகாந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் நடந்த அலுவலகத்திற்குள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை; வெளியே பூட்டப்பட்டிருந்தது.அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட விரும்பிய விருப்ப மனுக்களை, விஜயகாந்த் பரிசீலனை செய்தார். அதன் பின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொகுதி பங்கீடு குறித்த சிக்கல் நேற்று மதியம் தீர்க்கப்பட்டதும், தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பாகியுள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை?தி.மு.க., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் பிரசாரம் கிளம்பும் முன், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டணி பிரச்னை காரணமாக, பிரசார தேதி தள்ளி வைக்கப்பட்டதால் தேர்தல் அறிக்கை வெளியீடும் தள்ளிப்போனது. வரும் 24ம் தேதி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts