background img

புதிய வரவு

நெதர்லாந்துடன் நாளை மோதல்: இந்தியாவுக்கு 3-வது வெற்றி வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 4-வது “லீக்” ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் பகல்-இரவாக இந்தப் போட்டி நடக்கிறது. பலவீனமான நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் அந்த அணியை சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ள இயலாது.

இங்கிலாந்துக்கு எதிராக 292 ரன் குவித்து அந்த அணி தோல்வியை தழுவியது. நெதர்லாந்து தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது. இங்கிலாந்து (6 விக்கெட்), வெஸ்ட்இண்டீஸ் (7 விக்கெட்), தென்ஆப்பிரிக்கா (215 ரன்) ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி இருந்தது. அயர்லாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் கொஞ்சம் போராடி தான் வெற்றி பெற்றார்கள். இதனால் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை தான் மோதியுள்ளன. 2003-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்தியா 68 ரன்னில் நெதர்லாந்தை வீழ்த்தி இருந்தது. பேட்டிங்கில் இந்தியா பலம் பொருந்தியதாக உள்ளது. ஆனால் அயர்லாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்தது தேவையில்லாதது. ஷேவாக்கின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்து தான் இந்தியாவின் ரன் குவிப்பு இருக்கும். தெண்டுல்கர், காம்பீர், வீராட் கோக்லி, யுவராஜ்சிங், யூசுப்பதான் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

பேட்டிங்கில் அனைவரும் சிறப்பாக இருப்பதால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் கோக்லி கழற்றி விடப்படலாம். இந்தியாவின் பந்து வீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வங்காள தேசம், இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீச்சு மோசமாக இருந்தது. அயர்லாந்துக்கு எதிராக முன்னேற்றம் காணப்பட்டது.

ஜாகீர்கான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவருக்கு மற்ற முன்னணி பவுலர்கள் கை கொடுக்கவில்லை. கடந்த 2 ஆட்டத்திலும் இந்திய அணி 2 வேகப்பந்து வீரர், 2 சுழற்பந்து வீரருடன் களம் இறங்கியது. டோனி அதேபார்முலாவை நாளையும் பின்பற்றுவாரா என்பது தெரியவில்லை. 3 வேகப்பந்து வீரர் சேர்க்கப்பட்டால் நெக்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதேபோல முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts