background img

புதிய வரவு

தேர்தல் தேதியை மாற்றக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குரு.அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சிவ.இளங்கோ, பாரதிய ஜனதா வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் கமிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வக்கீல்கள் அபுசலீம், வி.பாபு, ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வியை பாதிக்கும். அரசியல் கட்சிகளின் உச்ச கட்ட பிரசாரத்தால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த முடியாது.

தேர்வு எழுதும் 17 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த ஓரிரு நாளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதும் இயலாத ஒன்று. தேர்தல் ஜனநாயகம், தேர்தல் நடவடிக்கை, வாக்குப்பதிவு அனைத்தும் கல்விக்கு கட்டுப்பட்டதுதான். எனவே தேர்தல் தேதியை குறைந்தபட்டம் ஏப்ரல் மாத இறுதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகிறது. தேர்தல் அறிவிப்பு ஆணை வெளியிட்ட பின்னர் தேர்தல் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வழக்கில் சட்டநிலை எதுவும் இல்லை. தேர்தல் தேதியை மாற்றினால் தேர்தல் ஆணையத்தின் திட்டமிடல் அட்டவணை அனைத்தும் மாறிவிடும். இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts